மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்த வேண்டும்: அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்த வேண்டும்: அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை
Updated on
1 min read

மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தமிழகத்தில் வங்கக் கடல் பகுதியில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை மீன் இனப்பெருக்கக் காலம் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, மீன்களின் இனப்பெருக்கம் தடைபடக் கூடாது என்பதற்காக, அந்நாட்களில் மீனவர்கள் விசைப் படகுகளில் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். இதன்படி, மீன்பிடி தடைக்காலம் புதன்கிழமை (15-ம் தேதி) தொடங்கி 45 நாட்கள் நீடிக்க உள்ளது. இந்நிலையில், மீனவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மீனவர் மக்கள் முன்னணியின் தலைவர் ஜெ.கோசுமணி ‛தி இந்து’விடம் கூறியதாவது:

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையை நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.100 என்ற அளவில் உயர்த்தி 45 நாட்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். மேலும், இத்தொகையை தடைக்காலம் முடிவதற்கு முன்பாக வழங்கப்பட வேண்டும். இதன் மூலம், இந்நிதியில் அதிகாரிகள் முறைகேடு செய்வதை தடுக்க முடியும்.

மேலும், தடைக்காலத்தில் இலங்கை மற்றும் வெளிநாட்டு கப்பல்கள் இந்திய எல்லைக்குள் வந்து மீன் பிடிப்பதையும் தடுக்க வேண்டும். உண்மையிலேயே, ஏப்ரல், மே மாதங்கள் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற காலமா என்பதை அரசு ஆய்வு செய்து மீனவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அத்துடன், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்கு மீனவர்களுக்கு அரசு போதிய தொழில்நுட்பப் பயிற்சி அளிக்க வேண்டும்.

இந்த மீன்பிடி தடைக்காலத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்கச் செல்லாது.

இவ்வாறு கோசுமணி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in