

பகுதி நேர பொறியியல் படிப்புக்கு மே 24 முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆணையர் குமார் ஜெயந்த், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழில்நுட்ப கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2014-2015-ம் கல்வி ஆண்டுக்கான முதல் ஆண்டு பகுதிநேர பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மே 24-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறும்.
கோவை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (சி.ஐ.டி.) கலந்தாய்வு நடத்தப்படும். 24-ம் தேதி சிவில் மற்றும் ஜவுளி தொழில்நுட்ப படிப்புகளுக்கும், 25-ம் தேதி மெக்கானிக்கல் படிப்புக்கும், 26-ம் தேதி எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
இது தொடர்பான விவரங்களை www.tn-dte-ptbe.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பித்துள்ள தகுதியான மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கவில்லை என்றால் தகுதியுள்ள மாணவர்களும் குறிப்பிட்ட நாளில் அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு குமார் ஜெயந்த் கூறியுள்ளார்.