

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு 2வது நாளாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆந்திர பேருந்துகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆந்திரா செல்லும் ரயில்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிய 20 தமிழர்களை ஆந்திர அதிரடிப்படை மற்றும் வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் இன்று(புதன்கிழமை) 2வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளன. நெல்லூர், திருப்பதி, நகரி, குண்டூர் செல்லும் பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.