சேலம் மாவட்ட மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியரின் கடிதம்

சேலம் மாவட்ட மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியரின் கடிதம்
Updated on
1 min read

பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு அனுப்பிய கடிதம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதாக சேலம் ஆட்சியர் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெண் குழந்தைகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நடந்தது.

இதை தடுத்திட வேண்டி சேலம் ஆட்சியர் க.மகரபூஷணம் கடந்த பிப்ரவரியில் யுனிசெஃப் நிதி உதவியுடன் 6 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கடிதம் அனுப்பினார்.

அந்த கடிதத்தில், ‘பெண் குழந்தைகளை பெற்றோர் தவிர்த்து வெளிநபர்கள் தொட்டாலோ, தொட முயற்சித்தாலோ துணிச்சலுடன் தங்களை அணுகுபவர்கள் குறித்து பெற்றோர், ஆசிரியரிடம் புகார் தெரிவியுங்கள். மேலும் உடனடியாக, 1098 என்ற இலவச அலைபேசி, 9626344000, 9944035880, 9789319520 ஆகிய எனது அலைபேசியில் தகவல் தெரிவியுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இக்கடிதம் அளித்து 3 மாதங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆட்சியர், சமூகநல அலுவலர், ஸ்மைல் திட்ட இயக்குநர், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஆகியோருக்கு அலைபேசி மூலம் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் அடிப்படையில, குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டும், பாலியல் தொல்லை தரும் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆட்சியர் க.மகரபூஷணம் கூறியதாவது:

பாலியல் தொல்லை மட்டுமல்லாமல் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் குறித்து இலவச அலைபேசி மூலம் தகவல் அளித்து, அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தங்களை தற்காத்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை கடிதம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் எனக்கு வந்தது. இதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண் குழந்தைகள் உடன் படிக்கும் பெண் குழந்தைகளை சகோதர, சகோதரியாக பழகிட வேண்டும் என்பதை வலியுறுத்தி யுனிசெஃப் மூலம் மேலும் 4 லட்சம் விழிப்புணர்வு கடிதம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in