நேரடி 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் படிப்புக்கு மே 4 முதல் விண்ணப்பம்

நேரடி 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் படிப்புக்கு மே 4 முதல் விண்ணப்பம்
Updated on
1 min read

நேரடி 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் பட்டயப் படிப்புக்கு மே 4 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

பிளஸ் டூ முடித்தவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐடிஐ படித்தவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம் (லேட்ரல் என்ட்ரி முறை).

மேலும், பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டரை ஆண்டு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் பட்டயப் படிப்பிலும், பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவிகள் தரமணியில் உள்ள தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஓராண்டு ஒப்பனைக்கலை பட்டயப் படிப்பிலும் சேரலாம்.

மேற்கண்ட லேட்ரல் என்ட்ரி முறை படிப்புக்கும், இரு சிறப்பு படிப்புகளுக்கும் மே 4-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.150. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு விண்ணப்பம் இலவசம். அவர்கள் சான்றொப்பம் பெறப்பட்ட (அட்டஸ்டேஷன்) சாதி சான்றிதழ் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை www.tndte.com என்ற இணையதளத்தில் இருந்தும் மே 4 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் மே 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in