

கடலோர ரோந்து பணிக்காக புதிதாக 12 பீச் பைக்குகள் வாங்கப்பட்டுள்ளன. இதை தமிழக கடலோர பாதுகாப்பு படை ஏடிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
தமிழக காவல் துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழக கடலோர பாதுகாப்பு படைக்கு ரூ.2 கோடியே 60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடற்கரை மணலிலும் வேகமாக செல்லக்கூடிய 24 பீச் பைக்(All Terrain Vehicles) வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 12 பீச் பைக்குகள் கனடாவில் தயார் செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சென்னை கலங்கரை விளக்கம் அருகே நேற்று நடந்த விழாவில் 12 பீச் பைக்குகளில் ரோந்து செல்லும் பணியை கடலோர பாதுகாப்பு படை ஏடிஜிபி சைலேந்திரபாபு தொடங்கிவைத்தார். அவர் கூறியதாவது:
12 பைக்குகளில் சென்னைக்கு 2 பைக் ஒதுக்கப்பட்டுள்ளன. மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பாதுகாப்பு பணிகளுக்கு இவை பயன்படுத்தப்படும். மற்ற பைக்குகள் தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர காவல் நிலையங்களுக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு பைக்கும் ரூ.7 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. மேலும் 12 பைக்குகள் ஒரு மாதத்தில் வந்துவிடும். கடற்கரை மணலிலும் வேகமாக செல்லும் ஜீப் வகை வாகனங்களை அமெரிக்காவில் இருந்து வாங்க இருக்கிறோம்.
தமிழகத்துக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பது உண்மை. எனவேதான் கடலோர பாதுகாப்பை பலப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.