

நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும் தொழில் பயிற்சி பெற்றவர்கள் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர் என்று மாநில தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் கலைவாணி கூறியுள்ளார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பாக ‘தொழில் நிறுவனங்களில் உள்ள மனித ஆற்றல் துறையில் நடைபெற்று வரும் மாற்றங்கள் மற்றும் தொழில்துறை உறவுகள்’ குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை மாநில தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் கலைவாணி தொடங்கிவைத்து பேசியதாவது:
தற்போது உள்ள வேலை முறைகளில் ஊழியர்களை நிறுவனங்கள் நிரந்தரப்படுத்தாமல் பகுதி நேர ஊழியர், தற்காலிக ஊழியர் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் என்ற வகைகளில் பிரித்து வைத்துள்ளனர்.
இவ்வாறு பிரித்து வைக்கப்பட்டு இருக்கும் வேலை முறையில் பெண்களுடைய பங்குதான் அதிக அளவில் உள்ளது. அதேசமயம் வேலைத்தளங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த அளவிலேயே உள்ளன. நாட்டில் முறைசாரா தொழில்களில் மட்டும் 34 கோடியே 8 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். நிறுவனங்களில் தற்காலிக ஊழியர்களாக 2 கோடியே 90 லட்சம் பேர் உள்ளனர். படித்தவர்கள் 80 சதவீதம் பேர் இருக்கிறார்கள். ஆனால், தொழில் பயிற்சி பெற்றவர்கள் 5 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கருத்தரங்கில் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.