Published : 10 Apr 2015 08:42 AM
Last Updated : 10 Apr 2015 08:42 AM

திருவண்ணாமலை, தருமபுரி, ஆத்தூரில் சோகம்: ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 14 பேரின் இறுதிச் சடங்கு

ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரில் 14 பேரின் இறுதிச் சடங்கு நேற்று தி.மலை, தருமபுரி, ஆத்தூரில் உள்ள அவரவர்கள் சொந்த கிராமங்களில் நடைபெற்றது.

ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமம் பழனி, முருகாபாடி கிராமம் மூர்த்தி, முனுசாமி, காந்தி நகர் கிராமம் மகேந்திரன், வேட்டகிரிபாளையம் கிராமம் பெருமாள், சசிகுமார், முருகன் ஆகிய 7 பேரது உடல்கள், பிரேதப் பரிசோதனை முடிந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் நள்ளிரவு கொண்டு வரப்பட்டன.

பழனி, மகேந்திரன் உட்பட சிலரது கால் துண்டிக்கப்பட்டும், தசைகள் வெட்டப்பட்டும் உள்ளதாகக் கூறி உறவினர்கள் ஆவேசமடைந்தனர். பழனியின் உடல் மிக மோசமாக இருந்தது. அவரது உடல் இறுதிச் சடங்கு காலை 11 மணிக்கு நடைபெற்றது.

இந்நிலையில், பாமக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு உடற்கூறு ஆய்வு செய்யக் கோரி, நேற்று மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பான உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பிக்க உள்ளதால் 6 பேரது சடலங்களை திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனைக்கு போலீஸார் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.

ஜவ்வாது மலையில் 5 பேர்

ஆந்திர போலீஸார் நடத்திய கொடூரத் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை மேல்குப்சானூர் கிராமத்தில் வசித்த பன்னீர்செல்வம், வெள்ளிமுத்து, சின்னசாமி, கோவிந்தசாமி, ராஜேந்திரன் ஆகிய 5 பேரது உடல்கள் நேற்று அதிகாலை, அவர்களது வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. உடல்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களது உடல்கள் நேற்று இறுதிச் சடங்குடன் அடக்கம் செய்யப்பட்டன.

தருமபுரியைச் சேர்ந்தவர்கள்

செம்மரம் கடத்தல் விவகாரத் தில் ஆந்திரா காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 தொழிலாளர்கள் கொல்லப் பட்டதில் 7 பேர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஹரிகிருஷ்ணன்(55), வெங்கடேசன்(25), சிவக்குமார்(35), எல்.லட்சுமணன்(48), டி.லட்சுமணன்(27)ஆகியோர் அரூர் வட்டம் சித்தேரி மலைக் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிவலிங்கம்(50) கருக்கம்பட்டி கிராமத்தையும், வேலாயுதம்(25) கலசப்பாடியை அடுத்த ஆலமரத்துவளவு கிராமத்தையும் சேர்ந்தவர்கள்.

இவர்களது உடல்களைக் கொண்டுவர அரூர் கோட்டாட்சியர் ஷகிலா, அரூர் காவல் ஆய்வாளர் ராஜன், வருவாய் ஆய்வாளர் ஜெயசெல்வம் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் ஆந்திரா மாநிலம் திருப்பதி பகுதிக்குச் சென்றனர். அங்கு 7 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின் தமிழக அதிகாரிகள் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலங்களை ஏற்றி வர வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 4 அமரர் ஊர்திகள் தயார் நிலையில் இருந்தன. ஃப்ரீஷர் பெட்டிகளில் வைத்து சடலங்களை அமரர் ஊர்தியில் ஏற்றினர். நேற்று காலை 9 மணிக்கு 7 பேரின் உடல்களும் அரூர் கொண்டுவரப்பட்டது.

அரூரில் இருந்து சுமார் 45 நிமிட நேரத்தில் 4 வாகனங்களும் மலை மீது கொண்டு செல்லப்பட்டன. வனப்பகுதி முடிந்து சமதள பரப்பு தொடங்கும் இடத்தில் அரசநத்தம், நயினா வளவு, புளியமரத்து வளவு, ஆலமரத்து வளவு, கோட்டக் காடு, கருக்கம்பட்டி, தரிசிகாடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். சடலங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களைக் கண்டவுடன் மலைவாழ் மக்கள் அனைவரும் பெருங்குரலெடுத்து கதறிய காட்சி உருக்கமாக இருந்தது. அப்பகுதியில் இருந்த காலி மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி சடலங்களை அடையாளம் கண்டனர். பிறகு, சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 3 கிராமங்களுக்கும் உரிய சடலங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

கிராமங்களுக்குச் சென்று சேர்ந்ததும், சடலங்களை இறக்கி வைத்த உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் சடலங்களை தகனம் செய்தனர். திரும்பிய திசையெல்லாம் நீண்ட நேரத்துக்கு அழுகையும், ஓலமும் தொடர்ந்தன. 7 பேரின் சடலம் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்படுவதையொட்டி அரூர், கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு, கொக்கராப்பட்டி கூட்டு ரோடு, அரசநத்தம் மலையடிவாரம், மலை கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டு இருந்தனர்.

ஆத்தூரில் ஒருவர்

ஆந்திராவில் கொல்லப்பட்ட வர்களில் சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த பைத்தூர், கல்லுக்கட்டு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (31) என்பவரும் ஒருவர். இவரது உடல் நேற்று அவரது சொந்த ஊருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.

ஆத்தூர் டி.எஸ்.பி காசிநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆத்தூர் கோட்டாட்சியர் ஜெயச்சந்திரன், வட்டாட்சியர் தேன்மொழி உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில், சசிகுமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் இறுதிச் சடங்குகளுக்கு பின்னார் சசிகுமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஒரே சிதையில் தந்தை - மகன்

சித்தேரி

மலையடிவாரத்தில் இருந்து அரசநத்தம் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் சுமார் 7 கிலோ மீட்டர் பாதை கரடு, முரடாக இருந்தது. இந்தப் பாதையில் செல்ல அமரர் ஊர்தியின் ஓட்டுநர்கள் முதலில் தயங்கினர். பின்னர் சூழல் கருதி மிக கவனமாக மலை உச்சி வரை வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டன.

அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த எல்.லட்சுமணன் மற்றும் அவரது சகோதரர் சித்தனின் மகன் சிவக்குமார் ஆகிய இருவரும் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். சித்தப்பா மற்றும் அண்ணன் மகன் ஆகிய இருவரின் சடலங்களும் ஒரே சிதையில் தகனம் செய்யப்பட்டன.

6 மாதக் கர்ப்பிணியின் அவலம்

இறந்தவர்களில் ஒருவரான வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள உறவுக்கார பெண்ணை காதலித்து 6 மாதங்களுக்கு முன்புதான் மணந்துள்ளார். அவர் மனைவி கனகராணி தற்போது 6 மாதக் கர்ப்பிணியாக உள்ளார். பிறக்கும் குழந்தைக்கு அப்பாவை எப்படி காட்டுவோம் என கனகராணியும், உறவினர்களும் கதறியது நெஞ்சை உலுக்கியது.

பார்வையற்ற தந்தையின் கதறல்

இறந்த அரசநத்தம் டி.லட்சுமணனுக்கு இன்னும் மணமாகவில்லை. அவரது தந்தை தீர்த்தகிரி பார்வையை இழந்த முதியவர். சிதை மூட்டும் முன்பு கயிற்றுக் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த மகன் சடலத்தின் அருகே அமர்ந்து தீர்த்தகிரி கதறி அழுதார். பார்வை தெரியாத நிலையில் பாதங்களை முகம் என நினைத்து முத்தமிட்டு அழுது புரண்டது மனதை கலங்கச் செய்தது.

சடலங்களின் மோசமான நிலைமை

கடந்த 7-ம் தேதியே இறந்த நிலையில் அனைவரின் சடலங்களும் அழுகி மோசமான நிலையை எட்டியிருந்தது. மலைப் பாதையில் அமரர் ஊர்தி வாகனம் சென்றபோது ஃப்ரீஷர் பெட்டிகளில் உடல்கள் இருந்தும் ரத்தக் கசிவு காண முடிந்தது. சடலங்களை இறக்கியபோது நெருங்கிய உறவுகள் கூட சில நொடிகளுக்குப் பிறகு சடலத்தின் அருகில் நின்று அழ முடியாதபடி நாற்றம் பரவியது. சடலங்களை இறக்கிவிட்டு அடிவாரம் வந்து சேர்ந்த அமரர் ஊர்தி வாகனங்களை அதன் ஓட்டுநர்கள் ஓரிடத்தில் நிறுத்தி தண்ணீரால் சுத்தப்படுத்திய பிறகே கிளம்பிச் சென்றனர்.

சிறையில் வாடும் 6 பேர்

கடந்த 2013-ம் ஆண்டு செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட 430 பேரை ஆந்திர போலீஸார் ஒரே நேரத்தில் கைது செய்தனர். அவர்களில் 30 பேர் தமிழர்கள். அதில் 6 பேர் தருமபுரி மாவட்டம் சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்டவர்கள். அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தருமன், வெங்கடாசலம், மகேந்திரன் மற்றும் கலசப்பாடியைச் சேர்ந்த 3 பேர் என 6 பேர் ஆந்திர சிறையில் உள்ளனர். அவர்களை ஜாமீனில் கொண்டுவர கூட வசதியும், விழிப்புணர்வும் இல்லாமல் தவிப்பதாக தருமனின் மனைவி அலமேலு கூறி னார்.

கட்சியினர் ஆறுதல்

7 பேரின் சடலம் கொண்டுவரப் பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அரூர் சட்டப்பேரவை உறுப் பினர் டில்லிபாபு தலைமையிலான குழுவினர் கிராமத்துக்குச் சென்று உறவினர் களுக்கு ஆறுதல் கூறினர். அதேபோல பாமக சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் மலைக்குச் சென்று ஆறுதல் கூறினர். துப்பாக்கிச் சூடுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ் ஆதரவு அமைப்பு சார்பில் தருமபுரியில் உள்ள ஆந்திரா வங்கி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆந்திரா சம்பவத்துக்கு நீதி விசாரணை கோரி தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விஜயகாந்த் நிவாரண உதவி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தருமபுரி மாவட்டம் அரூர் வந்தார். சித்தேரி மலை கிராமத்திலிருந்து இறந்தவர்களின் குடும்பத்தினரை அரூருக்கு அக்கட்சியினர் அழைத்து வந்திருந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜயகாந்த், 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

பின்னர் அவர் பத்திரிகையாளர் களிடம் கூறும்போது, வனத்துக்குள் உலவும் விலங்குகளை சுடுவதே தவறு எனும்போது அவைகளை விட மனித உயிர்கள் விலை மதிப்பற்றதாகி விட்டதா? தமிழகத்தில் போதிய வேலைவாய்ப்பை இங்குள்ள அரசு உருவாக்காததே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x