Published : 13 Apr 2015 05:37 PM
Last Updated : 13 Apr 2015 05:37 PM

தமிழ்ப் புத்தாண்டு: தமிழகத் தலைவர்கள் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா (அதிமுக பொதுச் செயலாளர்): ''தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாக உற்சாகமாய்க் கொண்டாடி வருகிறார்கள்.

தொன்றுதொட்டு இருந்து வந்த இந்த நடைமுறை மாற்றப்பட்டதைச் சரி செய்து, முன்னோர் வகுத்த வழிமுறையின்படி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திருநாளாய் தொடரும் என்பதை மீண்டும் நிலைநாட்டியதை நினைவு கூர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக மக்களின் உள்ளத்திலும், எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்திடும் இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒருமித்து உழைத்து, தடைகளைத் தகர்த்து, புதிய சாதனைகளைப் படைத்து, வளமிக்க தமிழகத்தை உருவாக்கிட உறுதியேற்போம்.

இந்த புத்தாண்டு தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சியையும், என்றும் குறையாத மகிழ்ச்சியையும், நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியையும் வழங்கும் ஆண்டாக விளங்கட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என ஜெயலலிதா கூறியுள்ளார்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): ''சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி மாசி, பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து, சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப் படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.

இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார்.

வெப்பம் மிகுந்துள்ள இக்காலத்தில், குளிர்ந்த நீரையும், பழங்களையும் வழங்கி கோடையின் தகிப்பைப் போக்குதல் தமிழர்களின் வழக்கமாகும்.

தாய்த் தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்கிறார் வைகோ.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): '' தை திங்கள் முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்பதற்கு எத்தனையோ வரலாற்று சான்றுகள் உள்ளன. அதன்படி தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். அதே நேரத்தில் சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள். அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும் காலம் என்பதால் சித்திரை திருநாள் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பர்.

சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா ஆகும். எனவே, தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் ஊழல்களும், தீமைகளும் அகன்று உண்மையும், நன்மையும் துணை சேரும் என்று நம்பலாம். உலகுக்கே உணவு படைக்கும் உழவர் வாழ்விலும், உழைக்கும் தமிழர் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் சூழ வேண்டும் என்பதற்காக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள நாம் நமது இலக்கை அடைவதற்காக அயராது உழைப்போம் என்று இந்த நன்நாளில் உறுதி ஏற்போம்'' என்று ராமதாஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் தலைவர்): ''நமது நாட்டில் பல்வேறு நாகரீகங்கள் இருந்தாலும் தமிழர்களின் நாகரீகம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்ற பெருமை உண்டு.

சமீப காலமாக மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கு காரணமாக தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். பொதுவாக விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், வர்த்தக துறையினர் என அனைத்து மக்களும் ஆட்சியாளர்களால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய துன்பங்களில் இருந்து மக்கள் விடுபட்டு வருகிற மன்மத ஆண்டில் எல்லா வளங்களும் பெற்று, வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்'' என்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): '' 'அன்னை மொழி காப்போம்! அனைத்து மொழியும் கற்போம்' என்ற கொள்கையோடு உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி, பழையன கழிதலும், புதியன புகுதலும், இயற்கையின் நியதி என்பதை போல, இந்த தமிழ்ப் புத்தாண்டில் இருந்தாவது மன கஷ்டங்கள் நீங்கி, அனைவரும் நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ்வோம்.

சித்திரை முதல் நாள் சிரமங்களை போக்கும் திருநாள் என தமிழர்கள் உவகையோடு கொண்டாடும் தமிழ்புத்தாண்டு தினத்தில் தமிழ் மக்கள் அனைவரும் அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x