என்னுடைய கதையை திருடி படம் எடுக்கிறார்கள்: கமிஷனர் அலுவலகத்தில் உதவி இயக்குநர் புகார்

என்னுடைய கதையை திருடி படம் எடுக்கிறார்கள்: கமிஷனர் அலுவலகத்தில் உதவி இயக்குநர் புகார்
Updated on
1 min read

என்னுடைய கதையை திருடி படம் எடுக்கிறார்கள். நியாயம் கேட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள் என்று உதவி இயக்குநர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த எம்.சி.சேகர் (40) என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனுவைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறேன். “கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை” என்ற தலைப்பில் நான் ஒரு கதையை எழுதினேன். 2010-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்த கதை குறித்த விவாதங்களில் மோகன் கிருஷ்ணா என்ற துணை இயக்குநரும் கலந்துகொண்டார். அதன்பின் மோகன் கிருஷ்ணா என்னை விட்டு பிரிந்து சென்றார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து என் கதையை படமாக்க திட்டமிட்டேன். அதற்கு பூஜை போடலாம் என்று நினைத்தபோது, என்னுடைய கதையை திருடி ‘அச்சாரம்’ என்ற பெயரில் மோகன் கிருஷ்ணா ஒரு படத்தை இயக்குவது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் அவரிடம் சென்று நியாயம் கேட்டேன். ஆனால் இயக்குநர் மோகன் கிருஷ்ணாவும் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானதேஷ் அம்பேத்காரும் என்னை கொலை செய்வதாக மிரட்டுகின்றனர்.

அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் என்னுடைய கதையை திருடி எடுத்த ‘அச்சாரம்’ படத்தை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கே.பாக்யராஜிடம் கேட்ட போது, “எம்.சி.சேகர் என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். அவருடைய வாழ்க்கையின் எதிர்காலமே அவர் எழுதி வைத்திருந்த கதையில்தான் உள்ளது. ஆனால் அந்த கதையை திருடி ‘அச்சாரம்’ என்ற தலைப்பில் படம் எடுத்துள்ளனர். என்னுடைய ‘இன்று போய் நாளை வா’ படத்தின் கதையை திருடி ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படம் எடுக்கப்பட்டது. அந்த விஷயத்தில் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் தான் இப்படத்தை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கச் சொன்னேன்” என்றார்.

‘அச்சாரம்’ படத்தின் இயக்குநர் மோகன் கிருஷ்ணா இதுபற்றி கூறும்போது, “எம்.சி.சேகர் யார் என்றே எனக்கு தெரியாது. அவரது கதையும், ‘அச்சாரம்’ படத்தின் கதையும் ஒன்றல்ல. இரண்டும் வேறு வேறு கதையாகும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in