

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆந்திர மாநில பேருந்துகள் மீது இன்று காலை சிலர் கல்வீசி தாக்கியதால் பேருந்துகள் சேதமடைந்தன.
திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அம்மாநில பேருந்துகளை போராட்டக்காரர்கள் கல் வீசித் தாக்கியதாக தெரிகிறது.
இதேபோல், சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஆந்திர பேருந்து சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் உள்ள பகுதியில் தீவிரப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் உள்ள ஆந்திர நிறுவனங்களான ஆந்திரா வங்கி, ஆந்திரா கிளப், ஆந்திரா சபா, ஆந்திரா மெஸ், ஆந்திரா பேருந்துகள் மற்றும் தமிழக எல்லையில் ஆந்திர மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.