Published : 05 Apr 2015 12:15 PM
Last Updated : 05 Apr 2015 12:15 PM

ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? - சேவையை வழங்க தயார் என்கிறது ‘இஸ்ரோ’

இந்திய - இலங்கை மீனவர்கள் கடல் எல்லைப் பிரச்சினைக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தால் நிரந்தர தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசு கேட்டுக்கொண் டால் இந்தச் சேவையை வழங்க தயாராக இருப்பதாக ‘இஸ்ரோ’ தெரிவித்துள்ளது.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், விரட்டியடிப்பதும் தொடர்கதையாக உள்ளது. சில நேரங்களில் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் உயிரிழக் கும் சோகங்களும் நிகழ்கின்றன. கடலில் எல்லை தாண்டுவதால்தான் இந்தப் பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மத்திய புவி அறிவியல் அமைச் சகம், இந்திய விண்வெளித் துறை உதவியுடன் கடல் வளம், மீன் வளம், பேரழிவு அபாயங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் செயற்கைக்கோள் உதவியுடன் பல கடல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப மையம், ஹைதராபாதில் இருக்கும் இந்திய கடல் தகவல் மையம் ஆகியவை செயற்கைக்கோள் மற்றும் கடலாய்வு மிதவைகளின் உதவியுடன் ‘மீன்கள் இருப்பதற்கான சாத்தியமுள்ள பகுதிகள்’ (Potential Fishing Zone) திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இதன்மூலம் மீன்கள் இருக்கும் பகுதிகளின் விவரம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்படு கிறது. ஆனால், கடல் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அறிவியல் ரீதியாக எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை.

இதுகுறித்து கடல் ஆய்வு நிறு வனத்தின் உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் பேசும்போது, ‘‘அரசின் கொள்கை முடிவு மற்றும் வெளியுறவு அரசியல் விவகாரங் களில் தலையிடக் கூடாது. நாங் களாக எதுவும் செய்ய முடியாது’’ என்றார்.

இஸ்ரோவின் விஞ்ஞானி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, “இஸ்ரோ சார்பில் ராணுவப் பயன் பாடு மற்றும் பொதுமக்கள் பயன்பாட் டுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நினைத்தால் ஆட்டோக்களுக்கு மீட்டர் சாதனம் பொருத்துவதுபோல அனைத்து படகுகளுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, அவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். அரசு கேட்டுக் கொண்டால் இதற்கான சேவையை இஸ்ரோ வழங்கும். படகுகளுக்கு ஒரு மையக் கட்டுப்பாடு அறை அமைத்து ஒவ்வொரு படகின் போக்குவரத்தையும் பதிவு செய்ய முடியும். இப்படிச் செய்தால் எல்லை தாண்டும் பிரச்சினைகளின்போது அவரவர் தரப்பு நியாயத்தை அறிவி யல் ரீதியாக எடுத்து வைக்க இயலும். அதே நேரத்தில் இந்தத் திட்டத்துக்கு இலங்கை அரசும் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் திட்டம் சாத்தியமாகும்’’ என்றார்.

சமீபத்தில் தமிழகம் வந்திருந்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தமிழக மீனவர் பிரதிநிதிகளைச் சந்தித்து பிரச்சினைகளைக் கேட்ட றிந்தார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, ‘‘தமிழகம் - இலங்கை கடல் பகுதியில் கைபேசி அலை உணர்வு உயர் கோபுரங்கள் அமைக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அது அமைக்கப்பட்டால் மீனவர்கள் எல்லை தாண்டும்போது அவர்களின் கைபேசி மற்றும் கையடக்கக் கருவிகளில் குறுந்தகவல், எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும்’’ என்றார்.

பிங்கர்ஷா கடல் சட்டம்

தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பின் (சிஐடியு) ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி கூறியதாவது:

அறிவியல் தொழில்நுட்ப உதவியால் எல்லாம் மீனவர் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. ஆண்டாண்டு காலமாக கடலில் பயணிக்கும் மீனவர்களுக்கு செயற்கைக்கோள், ஜிபிஎஸ் கருவிகள் சொல்லித்தான் எல்லை தெரியவேண்டும் என்பதில்லை. வெளிப்படையாக சொல்லப்போனால் இருநாட்டு மீனவர்களும் தெரிந்தேதான் எல்லையைத் தாண்டுகின்றனர்.

ஏனெனில் நமது மீனவர்கள் 14 முதல் 16 கடல் மைல்களுக்குள் மட்டுமே மீன் பிடிக்க இயலும். இத்துடன் இந்திய கடல் எல்லை முடிந்துவிடுகிறது. ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு 14 கடல் மைல் தொலைவில் இருக்கிறது. ஆனால், நம் பகுதியில் மீன் இல்லை. கச்சத்தீவில் இருந்து 30 கடல் மைல் வரை எல்லை தாண்டி சென்றால்தான் கொஞ்சம் மீன் கிடைக்கும். இது இரு நாட்டு மீனவர்களுக்கும் தெரியும். எல்லைப் பிரச்சினைக்கு காரணம் முழுக்க முழுக்க இந்திய - இலங்கை அரசியல் மட்டுமே.

1983-க்கு முன்பு வரை தமிழக - இலங்கை கடல் எல்லை பிரச்சினை இருந்ததில்லை. நாங்கள் இலங்கை செல்வோம். அவர்கள் இங்கே வருவார்கள். இலங்கையில் உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்துதான் எல்லைப் பிரச்சினையும் தொடங்கியது. அந்த அரசியல் இன்றுவரை நீடிக்கிறது.

1763-க்கு பிறகு பிங்கர்ஷா என்ற டச்சு நிபுணர் ஒரு கடல் சட்டத்தை இயற்றினார். 1982-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்காவின் மோன்-டி-கோபேவில் நடந்த உலக கடல் நாடுகளின் மாநாடு வரை அந்தச் சட்டம் நீடித்தது. குறுகிய கடல் எல்லைகளைக் கொண்ட நாடுகள் தங்களது எல்லையைப் பிரிக்கும்போது, கடல் பாதுகாப்பு தொடர்பான பணிகளைத் தவிர மீனவர்களுக்கு பொதுவான கடல் பகுதியாகவே பயன்படுத்த வேண்டும் என்று அந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் பல்வேறு நாடுகளின் அரசியலால் அந்தத் தீர்மானம் கண்டுகொள்ளப்படவே இல்லை. அது ஒன்றுதான் அனைத்து நாடுகளுக்கான கடல் எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.

இவ்வாறு கருணாமூர்த்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x