

கடந்த மாதம் திருவாரூரில் காரில் கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு திருச்சியில் சுங்கத்துறை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 18.5 கிலோ தங்கக் கட்டிகளில் 15 கிலோ தங்கக் கட்டிகள் மாயமானது, ஏப்.17-ம் தேதி சரிபார்த்தபோது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3.5 கோடி.
தங்கக் கட்டிகள் மாயமானது தொடர்பாக திருச்சி மண்டல சுங்கத்துறை ஆணையர் விசாரணை மேற்கொண்டு சுங்கத்துறை கண்காணிப்பாளர் முகமது பாரூக் மற்றும் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
தங்கக் கட்டிகள் மாயமானது தொடர்பான வழக்கை 16 பேர் அடங்கிய சிபிஐ குழு விசாரித்து வருகிறது. ஒரு வாரத்துக்கும் மேலாக திருச்சியில் முகாமிட்டுள்ள சிபிஐ குழுவினர் திருச்சி விமான நிலையம், சுங்கத்துறை அலுவலகம் மற்றும் திருவாரூர், வேதாரண்யம், முத்துப்பேட்டை பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஓராண்டில் திருச்சி விமான நிலையத்தில் யார் யாரிடமிருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என விசாரித்ததுடன், அவர்களது முகவரி, தொடர்பு எண்களையும் சுங்கத்துறை அதிகாரிகளின் செல்போன் எண்களையும் சிபிஐ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இதில், மேலும் 15 கிலோ தங்கம் மாயமாகியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. எனினும் சிபிஐ அதிகாரிகள் இதனை உறுதி செய்ய வில்லை.
இதனிடையே, திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள் குறித்தும் சிபிஐ குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.