

தமிழக, இலங்கை மீனவர்களிடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை சென்னையில் கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. அப்போது தமிழக மீனவர்கள் சார்பில், ஆண்டுக்கு 83 நாட்கள் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை, இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி உட்பட 7 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இக்கோரிக்கைகள் குறித்து மே மாதம் முடிவை அறிவிப்பதாக இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இரு நாட்டு மீனவர்களின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன், மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத் தீவு உள்ளிட்ட வடக்கு மாகாண மீனவ சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
அப்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதால் வடக்கு மாகாண தமிழ் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசப்படவுள்ளன.