

சுட்டுக் கொல்லப்பட்ட 8 பேரின் குடும்பத்தினரிடம் திருப்பதி டிஎஸ்பி தலைமையிலான 4 போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம் போலீஸார் கையொப்பம் கேட்டனர். அவர்கள் மறுத்ததால், விசாரணையை பாதியிலேயே முடித்துக்கொண்டு போலீஸார் திரும்பினர்.
திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாகக் கூறி, தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேரை, ஆந்திர சிறப்பு அதிரடிப்படை போலீஸார் கடந்த 7-ம் தேதி சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் உடல்களில் தீக்காயம் இருந்ததோடு, சிதைக்கப் பட்டு இருந்ததாகவும் அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டகிரிபாளையம், முருகாப் பாடி, காந்தி நகர் கிராமங்களைச் சேர்ந்த 6 பேர் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி சசிகுமார், முருகன், பெருமாள், மகேந்திரன், முனுசாமி, மூர்த்தி ஆகியோரது சடலங்கள் கடந்த 18-ம் தேதி மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில், சசிகுமார் மனைவி முனியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் ஆந்திர மாநில போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், திருவண்ணா மலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் கிராமத்துக்கு திருப்பதி கிழக்கு டிஎஸ்பி ரவிசங்கரரெட்டி, உதவி ஆய்வாளர் கருணாகரன் உட்பட 4 போலீஸார் நேற்று வந்தனர். அவர்களை உள்ளூர் போலீஸார் அழைத்து வந்தனர். அவர்கள் வருகை ரகசியமாக வைக்கப்பட்டி ருந்தது. இதையடுத்து, கண்ணமங்கலம் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 7 பேரின் குடும்பத் தாரும் வரவழைக்கப்பட்டனர்.
முதலில், கொலைக் குற்றச் சாட்டு தெரிவித்து புகார் தெரிவித்த சசிகுமார் மனைவி முனியம்மாளிடம் டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், அவரிடம் விசாரணை நடத்தியது தொடர்பாக கையொப்பம் கேட்டுள்ளனர். அவர் மறுத்துவிட்டார். எங்கள் வழக்கறிஞர் கூறாமல் எந்த கையொப்பமும் போட முடியாது என்று முனியம்மாள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதேபோல் மற்றவர்களும் தெரிவித்ததால், பாதியிலேயே விசாரணை தடைபட்டது. பின்னர், ஆந்திர போலீஸார் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் களின் வழக்கறிஞர் பாலுவை தொடர்புகொண்டு கேட்டபோது, “போலி என்கவுன்ட்டர் குறித்து விசாரணை நடத்த ரவிசங்கர் அய்யனார் தலைமையில் 8 பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளதாக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது. அந்த குழுவில் ஐஜி, டிஐஜி, 2 எஸ்பி, 2 டிஎஸ்பி ஆகிய உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். திருவண்ணாமலைக்கு வந்து
விசாரணை நடத்திய டிஎஸ்பி ரவிசங்கர ரெட்டி, அந்த குழுவில் கிடையாது. பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரிக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அப்படி இருக்கும்போது அவருடைய விசாரணைக்கு எப்படி ஒத்துழைக்க முடியும். சிறப்பு விசாரணை குழுவின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என்றார்.