Published : 22 Apr 2015 08:08 PM
Last Updated : 22 Apr 2015 08:08 PM

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ரூ.29 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம்

கோயம்பேடு மார்க்கெட்டின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ரூ.29.30 லட்சம் செலவில் 25 இடங்களில் கண்காணிப்பு கேரமாக்களை பொருத்த மார்க்கெட் நிர்வாகக் குழு திட்டமிட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் பூ, பழம், காய்கறி என 3 பிரிவுகளாக இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் மொத்தம் 3157 கடைகள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் மார்க்கெட்டுக்கு வந்து செல்கின்றனர். இந்த மார்க்கெட்டின் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்தை ஒழங்குபடுத்தவும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேரமராக்களை பொருத்த மார்க்கெட் நிர்வாகக் குழு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோயம்பேடு மார்க்கெட்டின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறு காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து ரூ.29 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 12 சுழலும் கண்காணிப்பு கேமராக்கள், 13 நிலை கண்காணிப்பு கேமராக்கள் என மொத்தம் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான டெண்டரும் கோரப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதன் மூலம், மார்க்கெட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணித்து, ஒழுங்குப்படுத்த முடியும். குற்றங்கள் ஏதேனும் நடந்தாலும், இதில் பதிவாகும் காட்சிகளைக் கொண்டு எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

ரூ.29 லட்சத்தில் கழிவறை:

மெட்ரோ ரயில் பணியின்போது அந்நிறுவனத்தால் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்த கழிவறை இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மார்க்கெட் நிர்வாகக் குழுவுக்கு ரூ.29 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு 5 கழிவறைகள், 5 குளியலறைகள் கொண்ட கழிவறை வளாகம் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x