

சென்னை, வேளச்சேரி பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதையை அமைப்பதற்காக 7,000 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்தும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - பரங்கி மலை இடையேயான பறக்கும் ரயில் திட்டம் 1975-ம் ஆண்டு தீட்டப்பட்டது. இதில் முதல் கட்டமாக கடற்கரை மயிலாப்பூர் இடையே 8.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.307 கோடியில் பாதை அமைக்கப்பட்டு, 1997-ம் ஆண்டு பறக்கும் ரயில் போக்கு வரத்து தொடங்கியது.
பின்னர் இரண்டாவது கட்டமாக மயிலாப்பூர் வேளச்சேரி இடையே யான ரயில் பாதை அமைக்கப்பட்டு 2007ம் ஆண்டு முதல் பறக்கும் ரயில் போக்கு வரத்து தொடங் கியது.
அதைத்தொடர்ந்து மூன்றாம் கட்டமாக வேளச்சேரி பரங்கி மலை இடையே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.495 கோடியில் பறக்கும் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இதுவரை ஐந்து கிலோ மீட்டரில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்க ளுடன் ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த ரயில் பாதையை அமைப்பதற்காக ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் உள்ள 27 வீடுகளை இடிக்கவேண்டி இருந் தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த வீடுகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் 2012-ம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டிய வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை திட்டம் தாமதமாகி வருகிறது.
இந்நிலையில் பறக்கும் ரயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத் தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வேளச்சேரி பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் இதுவரை பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே பாதை அமைக்க வேண்டியுள்ளது. இதற்காக 7,000 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். இதில், 2,500 சதுர மீட்டர் நிலம் அரசுக்குச் சொந்தமானது. அதை கையகப்படுத்துவதில் பிரச்சினை இல்லை. தனியார் நிலம் மற்றும் வீடுகளை கையகப்படுத்துவதற்கு அதிக நஷ்டஈடு கேட்கிறார்கள். அதை கொடுப்பதற்கு ரயில்வே நிர்வாகம் தயாராக இருக்கிறது.
நஷ்டஈடு கொடுக்கவும், திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி பெறவும் வழிவகை உள்ளது. விரைவில் நிலத்தைக் கையகப் படுத்தி, ஓராண்டுக்குள் ரயில் பாதை அமைத்து போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.