Published : 07 Apr 2015 11:04 AM
Last Updated : 07 Apr 2015 11:04 AM

மழலையர் பள்ளி அங்கீகார விதிமுறைகளை 6 வாரத்துக்குள் இறுதி செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் கண்டிப்பு

மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான விதிமுறைகளை 6 வாரத்துக்குள் வகுக்க வேண்டும். இல்லா விட்டால், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “அங்கீகாரம் பெறாமல் தமிழகத்தில் 760 மழலையர் பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவர்களின் கல்வித் தரத்தை கருத்தில் கொண்டு அங்கீகாரம் இல்லாத மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை அங்கீகாரம் பெற்ற மழலையர் பள்ளிகளுக்கு மாற்ற பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு இவ்வழக்கை கடந்தாண்டு ஆகஸ்டு 14-ம் தேதி விசாரித்து, பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில், அங்கீகாரம் பெற்ற மழலையர் பள்ளிகள் மற்றும் அதுதொடர்பான சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி ஆஜராகி, மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவதற்கு மேலும் 2 வார கால அவகாசம் அளிக்கும்படி கோரினார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

மழலையர் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்காக நீதிமன்றம் ஏற்கனவே 6 வார அவகாசம் அளித்திருந்தது. நீதிமன்றம் பலதடவை உத்தரவிட்ட பிறகும், அந்த விதிமுறைகளை வகுத்து அவற்றை இறுதி செய்வதில் அரசு தரப்பில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த விசாரணைக்குள் (6 வாரத்துக்குள்) இந்த விதிமுறைகளை இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதற்கு முன்பு அதுதொடர்பாக சம்பந் தப்பட்டவர்களிடம் ஆலோச னைகளைப் பெற வேண்டும். இதைச் செய்யாவிட்டால், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x