

அரசுடைமையாக்கப்பட்டுள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
நிதிச் சிக்கல் மற்றும் நிர்வாக சீர்கேடு களில் சிக்கித் தவித்த அண்ணாமலை பல் கலைக்கழகம் கடந்த ஆண்டு தமிழக அரசால் அதிரடியாக அரசுடைமையாக்கப்பட்டது. சட்டமன்றத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஐஏஎஸ் அதிகாரி ஷிவ்தாஸ் மீனா சிறப்பு நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பல்கலைக் கழகத்தில் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
நிர்வாகத்தின் நிதி முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாக துணைவேந்தராக இருந்த ராமநாதனை பணிநீக்கம் செய்தது, போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்தவர்களைக் கண்டறிந்து பணிநீக்கம் செய்தது, முறையற்ற வகையில் பதவி உயர்வு பெற்றவர்களைக் கண்டறிந்து தகுதி நீக்கம் செய்தது, பணிக்கு வராதவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்தது, ஊழியர்களின் சொத்து விவரங்களை கண்ட றிந்தது உள்ளிட்ட பல பணிகளை அவர் மேற்கொண்டார். சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் பல்கலைக்கழகம் தற்போது கட்டுப்பாடான நிர்வாக அமைப்பின்கீழ் செயல்பட தொடங் கியுள்ளது.
துணைவேந்தரை தேர்வு செய்ய குழு
இந்நிலையில் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணராக இருந்த ஆழ்வார் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு செய்தித் தாள்களில் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்களாகக் கருதுகிறவர்களை மே மாதம் 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் செய்து தனது நடவடிக்கை களை தொடங்கியுள்ளது. விண்ணப்பிப்பவர் களில் இந்தக் குழு தகுதியான மூன்று பேரின் பட்டியலைத் தயாரித்து ஆளுநருக்கு அனுப்பும். அதில் ஒருவரை ஆளுநர் துணை வேந்தராக அறிவிப்பார். இதுதான் நடை முறை.
நியமனத்தில் குறுக்கீடு?
இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் நிர்வாகத்தினருக்கு ஆதரவான பிரமுகர்களில் குறிப்பிட்ட ஒருவரையே துணைவேந்தராக தேர்ந் தெடுக்க முயற்சி நடைபெற்று வருவதாக பல்கலைக்கழக ஊழியர்களிடையே ஊர்ஜிதப் படுத்தும் வகையிலான பேச்சு எழுந்துள்ளது. இந்த பிரமுகர், பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையில் முக்கிய பதவியில் இருந்தவர் என்றும் தற்போது மூத்த மத்திய அமைச்சராக உள்ளவரின் உறவினர் என்றும் கூறப்படுகிறது. மேலும் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிர்வாகத்துக்கு இந்த பிரமுகர் நெருங்கிய உறவினராக இருப்பதால், இப்பதவிக்கு விண்ணப்பிக்குமாறு அவ ருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இவற்றுக் கெல்லாம் மேலாக துறைக்குத் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சருக்கும், அந்தத் துறையில் உள்ள அதிகாரிகளுக்கும் இந்த பிரமுகரையே கொண்டுவர வேண்டும் என்று நெருக்குதல் அளிக்கப்பட்டுள்ளதாம். அதற்கேற்ற வகையில் தமிழக அமைச்சரின் உத்தரவின்பேரில் தேர்வுக் குழு அமைக்கப் பட்டுள்ளதாக ஊழியர்களிடையே பரவலான பேச்சு எழுந்துள்ளது.
அப்படி அந்த பிரமுகர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு பல்கலைக்கழகம் அவரது நிர்வாகத்தின்கீழ் வந்துவிட்டால் முந்தைய நிர்வாகம் என்ன நினைக்கிறதோ அது தங்கு தடையில்லாமல் நடைபெறும் என்கிறார்கள்.
எந்த நோக்கத்துக்காக பல்கலைக் கழகத்தை அரசு கையகப்படுத்தியதோ, அந்த நோக்கம் தற்போது அமைச்சரின் முயற்சியால் திசைமாறி செல்கிறதோ என்ற அச்சம் பல்கலைக்கழக ஊழியர்களிடையே எழுந்துள்ளது. எனவே துணைவேந்தர் நியமனத்தில் அனைத்தும் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு, அதன்படி செயல்பட வேண்டும் என்று ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.