

எய்ம்ஸ் மருத்துவமனையை தருமபுரியில் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை, செங்கிப் பட்டி (தஞ்சாவூர்), பெருந்துறை ஆகிய 5 இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. மாநில அரசின் பரிந்துரையின்பேரில் மேற்சொன்ன இடங்களில் ஏதாவது ஒன்றில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையை தருமபுரியில் அமைக்க அனைத்து வசதிகளும் உள்ளதால் அதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். தருமபுரியில், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசுக்கு சொந்தமாக 400 ஏக்கருக்கு அதிகமான நிலம் உள்ளது. மற்ற பகுதிகளைவிட தருமபுரியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை திட்டமிட்டு மேம்படுத்த முடியும்.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து மனித வாழ்நிலைக் குறியீடுகளிலும் தமிழகத் தின் கடைசி மாவட்டமாக தருமபுரி உள்ளது. எனவே, அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக் கப்பட்டால் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் பயனடைவர்.
மேலும், தருமபுரிக்கு அருகில் பெங்களூர் விமான நிலையம் இருப்பதால் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மருத்துவ வல்லுநர்கள் வந்து செல்வதற்கும் வசதியாக இருக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக ஆய்வு செய்யப்படும் இடங்களின் பட்டியலில் தருமபுரியை சேர்க்கவும், அங்கு அந்த மருத்துவமனையை அமைக்கவும் தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.