

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது அகில இந்திய மாநாடு குறித்த மறு ஆய்வுக் கூட்டம் முதலியார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறும்போது, மத்திய பாஜக அரசு விவசாயிகள் விரோத போக்குடன் செயல்பட்டு வருகிறது. விவசாயத்தை பாதிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டுவர முனைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை நிரப்புதல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான போராட்டங்களையும் வருகிற மே 14-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும்.
பெரிய நிறுவனங்கள், நில மாஃபியாக்கள், கட்டுமான ஆதிக்கவாதிகள் போன்றவர்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் விவசாய நிலங்களை எளிதாக கபளிகரம் செய்ய அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும்போது மேற்கொள்ள வேண்டிய சமூக தணிக்கை முறையை முற்றிலும் கைவிட்டுவிட்டது.
நிலம் கையகப்படுத்தும்போது 80 சதவீதம் உரிமையாளர்கள் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற ஷரத்தையும் ரத்து செய்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்து பாதிக்கப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம்.
மோடி தலைமையிலான ஆட்சியின்கீழ் ஆர்எஸ்எஸ், விஎச்பி, சங்பரிவார் அமைப்புகள் தங்கள் வகுப்புவாத கொள்கை களை தீவிரமாக பரப்ப முனைந் துள்ளன. மதவாத அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்த பாஜக அரசு ஊக்குவிக்கிறது. அனைத்து இடதுசாரி கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மத்திய பாஜக அரசின் தீய சிந்தனைகளை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
மேலும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் உள்பட அனைத்து அமைப்புகளும் நிலம் கையகப் படுத்தும் சட்டத்துக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்றார்.