

விவசாயிகள் நலன் காப்போம் என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி கொடுத்து ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக அரசு மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தவேண்டும். விவசாயத்தைப் பேணிக் காக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டியதுதான் அரசாங்கத்தின் செயல்பாடாக இருக்கவேண்டும்.
உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் ஆணையம் ஏற்கனவே பரிந்துரைத்தது. ஆனால், மத்திய அரசின் புதிய குழு உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக உற்பத்தி செலவுடன் 10 சதவீதம் மட்டும் கூடுதலாக வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
விவசாயிகள் நலன் காப்போம் என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி கொடுத்து ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக அரசு மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது''என்று ஜி.கே வாசன் கூறியுள்ளார்.