தடகள வீராங்கனை சாந்திக்கு வேலை வழங்க மத்திய அரசு மறுப்பு

தடகள வீராங்கனை சாந்திக்கு வேலை வழங்க மத்திய அரசு மறுப்பு
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கத்தக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. தடகள போட்டிகளில் தொடர்ந்து வெற்றி வாகை சூடிய இவர், கடந்த 2006-ல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று, நாட்டின் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஆனால், உடல் தகுதிப் பிரச் சினையால் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதுடன், சாந்தி பெற்ற வெள்ளிப் பதக்கமும் பறிக்கப்பட்டது. எனினும், தமிழக அரசு அப்போது அவருக்கு அளித்த ரொக்கப் பணமும், புதுக்கோட்டையில் தற்காலிக தடகளப் பயிற்சியாளர் பணியும் அவருக்கு ஆறுதல் அளித்தது.

பயிற்சியாளர் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என பல முறை சாந்தி வலியுறுத்தியபோது, அலுவ லர்கள் தட்டிக்கழித்ததால் 2010 ஜூலை 31-ல் பணியை ராஜினாமா செய்துவிட்டு, பெற்றோருடன் செங்கல்சூளையில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.

இதையறிந்த அப்போதைய மத்திய அமைச்சர் அஜய் மக்கான் பரிந்துரையில் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்(சாய்) பயிற்சி மையத்தில் தடகளப் போட்டி பயிற்சியாளருக்கான ஒரு வருட பட்டயப் படிப்பில் கடந்த 2013 ஜூலை மாதத்தில் சேர்ந்தார்.

இந்நிலையில், பறிக்கப்பட்ட தனது வெள்ளிப் பதக்கத்தை திரும்பப் பெற்றுத்தரவும், நிரந்தர பயிற்சியாளர் பணி அளிக்கவும் வேண்டி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரை 2014 டிச.15-ம் தேதியும் மறுநாள் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும் டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தார் சாந்தி.

அப்போது கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனராம்.

இந்நிலையில் சாந்தியிடம் இருந்து பறிக்கப்பட்ட பதக்கத்தைத் திரும்பப் பெற்றுத் தரவும் அவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் இயலாது என மத்திய விளையாட்டு அமைச்சகம் சாந்திக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சாந்தி கூறும்போது, “வேலையும், பதக்கமும் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால், மத்திய அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in