

தூக்கத்தில் இருந்து உடனடியாக அதிமுக அரசு விழித்துக் கொண்டு மக்களின் குறைகளை குறித்த காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று ஸ்டாலின் எழுதியுள்ள முகநூல் பதிவில், ''செயலற்ற நிர்வாகத்தை நடத்தி வரும் அதிமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் விடுத்து வருகிறது.
மாநிலத்தில் செயலற்ற சமீப நிகழ்வாக மக்களின் குறை தீர்க்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக தமிழக அரசை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும், இதன் விளைவாக நாளுக்கு நாள் தொடரப்படும் பொதுநல வழக்குகளால் நீதிமன்றத்தின் சுமை கூடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரிக்கப்பட்டு தீர்வு காண வேண்டும் என்ற நீதிமன்ற வழிகாட்டுதல்களையெல்லாம் புறந்தள்ளி, மாநில அரசு தொடர்ந்து அக்கறையற்றுள்ளது.
மக்கள் மனுக்களை உரிய காலத்திற்குள் விசாரிக்கவில்லை என்றால், தலைமை செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடுவோம் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அதிமுக அரசு அதன் தலைவியின் மீதுள்ள வழக்கின் மீது கவனம் செலுத்துகிறதே தவிர தங்களுடைய முதன்மை கடமை தமிழக மக்களின் நலனில் அக்கறை காட்டுவதுதான் என்பதை மறந்துவிட்டது. அமைச்சர்கள் செயல்படுவதுமில்லை, நேர்மையாகவும் திறமையாகவும் செயல்படும் அதிகாரிகளை ஊக்குவிப்பதுமில்லை.
இது இந்தியாவில் வலுவான மற்றும் சிறந்த நிர்வாகத்தை நடத்தும் அதிகாரிகள் நிறைந்த மாநிலங்களில் ஒன்று தமிழகம் என்ற அந்த பெருமையை கெடுத்து விட்டது. தூக்கத்தில் இருந்து உடனடியாக அதிமுக அரசு விழித்துக் கொண்டு மக்களின் குறைகளை குறித்த காலத்தில் நிறைவேற்ற வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.