Published : 07 May 2014 06:46 PM
Last Updated : 07 May 2014 06:46 PM

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைநாட்டும் முல்லைப் பெரியாறு தீர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி



முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில், தென் தமிழக மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் நிலைநாட்டப்படும் வகையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதாக, முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ததில் வெற்றி; நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்ததில் வெற்றி என்ற வரிசையில், இன்று முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயம் வழங்கப்பட்டு இருக்கிறது; தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்பட்டு இருக்கிறது என்ற இனிப்பான வெற்றிச் செய்தி என்னை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, எனது ஆட்சிக் காலத்தில், தமிழக அரசின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வலுவான வாதங்களையடுத்து, தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையின் அன்றைய நீர்மட்டமான 136 அடியிலிருந்து முதற்கட்டமாக 142 அடிக்கு நீரை தேக்கி வைத்து கொள்ளலாம் எனவும்; அணையினை பலப்படுத்தும் பணியினை மேற்கொள்ளலாம் எனவும்; இப்பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசிற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் 27.2.2006 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், பலப்படுத்தும் பணிகள் மத்திய நீர்வளக் குழுமத்தினர் கூறியபடி முடிக்கப்பட்ட உடன், தனிப்பட்ட நிபுணர்கள் மேற்கொண்டு ஆய்வு நடத்தி, அணையின் நீர்மட்டத்தை உச்சமட்ட நீரளவான 152 அடிக்கு உயர்த்துவது குறித்து முடிவு செய்வார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்புரை வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில், 2006-ல், 2003 ஆம் ஆண்டைய கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள பாதுகாப்பு சட்டத்தில் கேரள அரசு திருத்தங்களை கொண்டு வந்தது. இந்தத் திருத்தச் சட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் உச்சமட்ட நீர் அளவு 136 அடி என நிர்ணயம் செய்யப்பட்டது. கேரள அரசின் இந்தச் சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்திற்கு முரணானது; இந்தச் சட்டம் செல்லத்தக்கதல்ல என உத்தரவிடக் கோரி 31.3.2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கருணாநிதி மீது சாடல்

2006-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக இந்தப் பிரச்சினை திசை மாறி போய்விட்டது. ஆட்சியில் இல்லாத போது, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சினைகள் குறித்து வாய்கிழிய பேசிய கருணாநிதி, ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டின் உரிமைகளை பெற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குடும்ப வியாபாரம் காரணமாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கேரள அரசின் சட்டத் திருத்தத்திற்கு மதிப்பளித்தார். பின்னர், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன பிரிவிற்கு மாற்றப்பட்டது. இது மட்டுமல்லாமல், புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது குறித்து, நான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அறிக்கை வெளியிட்ட போது, "இன்னும் அனுமதி அளிக்கவில்லை" என்று வாதாடினார் அப்போதைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது என்று தெரிந்தவுடன், "மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரை கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும்" என்றார் கருணாநிதி. பின்னர், தன் குடும்ப நலம் பாதிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சி, "கேரள அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தப்படும்" என்றார் கருணாநிதி. கடைசியில், அதையும் நடத்த கருணாநிதிக்குத் துணிவில்லாததால், அந்தக் கூட்டமும் நடைபெறவில்லை.

கருணாநிதியின் இந்த நடவடிக்கைகள் "கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது" என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்தன. இருப்பினும், மத்திய அரசின் செயலைக் கண்டித்து எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பின்னர், முல்லைப் பெரியாறு வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசனப் பிரிவு, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் ஏ.எஸ். ஆனந்தை தலைவராகக் கொண்டு, ஐந்து நபர்களை கொண்ட ஓர் அதிகாரம் படைத்த குழுவினை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்தின் நலன்களை காக்கும் பொறுப்பில் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, ஐவர் குழுவில் தமிழகம் இடம் பெறாது என்று அறிவித்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் இது போன்ற உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்து இருக்கும் போது, ஐவர் குழுவில் தமிழக அரசின் சார்பில் பிரதிநிதி இடம் பெறவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பிற்கு எதிரான கேரள அரசின் சட்டத்தை தமிழக அரசு ஆதரிப்பதாக அர்த்தம் ஆகிவிடாதா?

தமிழகத்தின் சார்பில் யாரும் நியமிக்கப்படவில்லை என்றால், தமிழகத்தினுடைய கருத்துகளை பிரதிபலிக்க முடியாத சூழ்நிலை வந்துவிடுமே! தமிழகத்தின் சார்பில் சொல்வதற்கு ஏதுமில்லை என்று உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டு விடாதா? தமிழகத்தின் சார்பில் ஐவர் குழுவில் யாரும் இடம் பெறாத பட்சத்தில், கேரள அரசிற்கு சாதகமான ஓர் அறிக்கையை மேற்படி குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால், அதன்படி, தமிழகத்திற்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்க வேண்டிய நிலைமை உச்ச நீதிமன்றத்திற்கு ஏற்பட்டுவிடாதா?

தமிழகத்திற்கு பாதகமான ஒரு தீர்ப்பு வரும் பட்சத்தில், அதை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தானே முறையிட வேண்டும்? இது காலதாமதத்திற்கு வழிவகுக்காதா? என பல்வேறு வினாக்களை எழுப்பி, ஐவர் குழுவில் தமிழகம் இடம் பெறாது என்று கருணாநிதி அறிவித்து இருந்தது முறையற்ற செயல் என்று நான் அறிக்கை விடுத்தேன்.

நான் இந்த அறிக்கையை விடுத்த பிறகு தான் ஐவர் குழுவில் தமிழகத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு நியமித்தது.

சிறப்புத் தீர்மானம்

பின்னர், 2011 ஆம் ஆண்டு மே மாதம், நான் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து அரசு அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினேன். தமிழ்நாட்டின் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுத்துரைப்பதற்காக 15.12.2011 அன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பின்வரும் தீர்மானம் இயற்றப்பட்டு அத்தீர்மானம் மத்திய அரசின் தகவலுக்காகவும், மேல் நடவடிக்கைக்காகவும் 16.12.2011 அன்று அனுப்பி வைக்கப்பட்டது:

"தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளின் வாதங்களையும், வல்லுநர்களின் அறிக்கைகளையும் ஆராய்ந்து, அதன் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்பதால், அதன் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாகவும்; எஞ்சிய பலப்படுத்தும் நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட பின், 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 27.2.2006 அன்று தீர்ப்பளித்த பிறகு, அந்த ஆணையை, இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் அவமதிக்கும் வகையில், "கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006", என்ற சட்டத்தை இயற்றி அந்த சட்டத்திற்கு எதிரான மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்ற உண்மைக்கு மாறான பிரச்சாரம் மூலம் கேரள மக்களிடையே பீதியை கிளப்பிவிட்டு, புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கேரள அரசு வலியுறுத்துகிறது.

அதே நேரத்தில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்று 9.12.2011 அன்று கேரள சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்றியுள்ள கேரள அரசு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது எனினும், அரசமைப்புச் சட்டத்தின்படி, ஏற்படுத்தப்பட்ட கேரள சட்டமன்றத்தை கண்டிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்பதால், அந்தத் தீர்மானத்தின் மீது தமிழக மக்களின் வருத்தத்தினை தெரிவிப்பது என்றும்; முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, கேரள அரசு உண்மைக்கு மாறான பிரச்சாரத்தை மேற்கொண்டு இருப்பதையொட்டி, தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இதனால், முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் பொருட்டு மத்திய தொழிற் பாதுகாப்புப் படையை, அந்தப் பகுதிக்கு உடனடியாக மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்றும்; உச்ச நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு ஏதுவாக, 2006 ஆம் ஆண்டு, கேரள பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டத்தில் உரிய திருத்தங்களை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும்; அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த, எஞ்சியுள்ள நீண்டகால அணைப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு, தமிழகத்திற்கு தடை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும்; எந்தச் சூழ்நிலையிலும், தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்றும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தீர்மானிக்கிறது."

ஆனால், இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க.வும் இதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரம் அளிக்கப்பட்ட குழு முன்பு தமிழக அரசின் சார்பில் நியாயமான, வலுவான, திறமையான வாதங்கள் வைக்கப்பட்டன. தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளின் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையிலும், ஆய்வுகளின் அடிப்படையிலும், அதிகாரம் பெற்ற குழு தனது அறிக்கையை 25.4.2012 அன்று உச்சநீதி மன்றத்திற்கு அளித்தது.

இதனைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணை வழக்கினை விசாரித்து வந்த அரசியல் சாசன அமர்வு, இறுதி கட்ட விசாரணையை 23.7.2013 முதல் 21.8.2013 வரையில் பல்வேறு கால கட்டங்களில் மேற்கொண்டது.

இந்த விசாரணையின் போது, தமிழ்நாட்டின் சார்பில், கேரள அரசின் திருத்தச் சட்டம் அரசியல் சாசன அமைப்பிற்கு முரணானது; ஏற்கெனவே 2006-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவான, முதற்கட்டமாக அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரையில் உயர்த்திக்கொள்ளலாம் என்பது போன்ற உத்தரவுகள் உறுதி செய்யப்பட வேண்டும்; அணை மிகவும் வலுவானதாக உள்ளதால் கேரள அரசு தெரிவிக்கின்றவாறு, தற்போதைய அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டத் தேவையில்லை என்பன போன்ற ஆணித்தரமான வாதங்கள் உச்ச நீதிமன்றத்தின் முன்பு எடுத்துரைக்கப்பட்டன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், தமிழக அரசின் வாதங்களையும், கேரள அரசின் வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (7.5.2014) தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்" என்பதற்கேற்ப அமைந்துள்ளது. இந்த தீர்ப்பில் தமிழ்நாட்டின் உரிமை மற்றும் எனது தலைமையிலான அரசு எடுத்த முடிவுகள் அனைத்தும் நிலைநாட்டப்பட்டுள்ளன.

இந்த தீர்ப்பில் தமிழ்நாடு தாக்கல் செய்த சிவில் வழக்கு தீர்ப்பாணை ஆக்கப்பட்டுள்ளது. கேரள அரசின், கேரள பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006, அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று உத்திரவிடப்பட்டுள்ளதோடு, பிப்ரவரி 2006-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரையில் உயர்த்திக் கொள்ளலாம் என்ற தீர்ப்பிற்கு கேரள அரசு குறுக்கீடு ஏதும் செய்யக் கூடாது என்றும்; அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டவாறு தமிழ்நாடு அரசு பராமரிப்பு பணி மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரள அரசின் அச்சங்களில் உண்மை ஏதுமில்லை என்றாலும், மத்திய நீர்வளக் குழுமம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் சார்பில் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவுக்கு உயர்த்தப்படுவதை மேற்பார்வையிட வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் வாயிலாக தென் தமிழக மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் நிலைநாட்டப்பட்டு உள்ளது.

வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் தமிழக மக்களை சேரும் என்று தெரிவித்து, வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த வெற்றியை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x