

எய்ம்ஸ் மருத்துமனை அமைக்க தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் உத்தேசமாக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் ரூ.1,500 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக ஈரோடு, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தமிழக அரசு இடம் ஒதுக்கியுள்ளது.
இதில், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளர் தாய்த்ரி பாண்டா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள, நூற்றாண்டுகள் பழமையான காசநோய் மருத்துவனை வளாகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை மத்தியக் குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, மத்தியக் குழுவினரிடம் பேசிய ஆட்சியர் என்.சுப்பையன், “இங்கு காசநோய் மருத்துவமனைக்குச் சொந்தமான இடத்தில் 206 ஏக்கர் நிலத்தை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு செய்துள்ளோம். இந்த இடம் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் (2 கி.மீ.) உள்ளது. இங்கிருந்து திருச்சி பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் 30 கி.மீ. தொலைவிலும், தஞ்சை ரயில் நிலையம் 23 கி.மீ., புதிய பேருந்து நிலையம், விமானப் படை நிலையம் 20 கி.மீ., பூதலூர் ரயில் நிலையம் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளன.
இந்த இடத்துக்கு எதிரிலேயே அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, சென்னை செல்ல பேருந்து, ரயில் வசதிகள் உள்ளன. நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் வசதியும், விரிவாக்கத்துக்கு தேவையான நிலமும் உள்ளன” என்றார்.
பின்னர், தாய்த்ரி பாண்டா செய்தியாளர்களிடம் கூறும்போது, “இதுவரை நாங்கள் 4 இடங்களைப் பார்த்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் அளித்த விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து, அதுகுறித்த முதல்கட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அளிப்பது மட்டுமே எங்கள் பணி. எந்த இடம் சரியானது என்பதை உயர்நிலைக் குழு முடிவு செய்யும்” என்றார்.
ஆய்வுக் குழுவில், மத்திய சுகாதாரத் துறையின் கட்டிட எழிற்கலை வல்லுநர் சச்சின் மஹேந்துரு, பெங்களூரு நிம்ஹான்ஸ் மருத்துவனை உதவி செயற் பொறியாளர் என்.எல்.சதீஷ், மத்திய சுகாதரத் துறை சார்பு செயலர் எல்.சந்திரசேகரன், மருத்துவர் ஜெ.பாலச்சந்தர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
பல்வேறு கட்சியினர், அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் ஆகியோர், செங்கப்பட்டியிலேயே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மத்தியக் குழுவினரிடம் மனுக்களை அளித்தனர்.
தொடர்ந்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவர்களுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.