அரசாணை எண் 92: சில பிரச்சினைகள் - ஏமாற்றப்படும் எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள்

அரசாணை எண் 92: சில பிரச்சினைகள் - ஏமாற்றப்படும் எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள்
Updated on
2 min read

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 50 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி மாணவர்களாக உள்ளனர். அதே போல் பிளஸ் 2 தேர்வில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால், இதில் 20 சதவீதம் பேர்தான் உயர்கல்வி படிக்கச் செல்கின்றனர். மீதமுள்ள 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பைத் தொடர வசதி இல்லாமல் மேல்நிலைப் பள்ளியுடன் கல்வியை நிறுத்தி விடுகின்றனர்.

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் கிடைக்கிற இடங்கள் போதுமானதாக இல்லை என்பதும் தனியார் கல்லூரிகளில் படிக்க வசதி இல்லை என்பதும் இதற்கு காரணம். இதனால் எஸ்சி, எஸ்டி மாணவர்களில் உயர்கல்வி பெறுவோரின் சதவீதத்தை அதிகரிக்க உயர்கல்வி படிப்ப தற்கான கட்டணத்தை அரசு வழங்கினால் நிறைய மாணவர்கள் படிக்க முன்வருவார்கள் என்றும் அதே போல் உயர்கல்வி பெறுவோர்களின் சதவீதம் உயரும் என்றும் மத்திய அரசு சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு வழங்கும் என்றும் அறிவித்தது.

இதையொட்டி தமிழக அரசு 2012-ம் ஆண்டு அரசாணை எண் 92-ன்படி குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்கிற எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் சுயநிதி கல்லூரி மற்றும் சுயநிதி பாடப் பிரிவுகளில் பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை. இவர்களுக்கான கட்டணத்தை அரசே அளிக்கும் என்று அறிவித்தது. இதற்காக கடந்த ஆண்டு ரூ.380 கோடியும், இந்த ஆண்டு ரூ.600 கோடியும் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வற்புறுத்தும் கல்லூரிகள்…

ஆனால், அரசு நிதியுதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் சுயநிதிப் பாடப்பிரிவுகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களை கட்டணம் கட்டச்சொல்லி கல்லூரிகள் வற்புறுத்தி வருகின்றன. அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் முதல்வர்கள் அரசாணை எண்: 92 தங்களுக்குப் பொருந்தாது என்று கூறுகின்றனர்.

இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். அரசாணை 92-ன்படி கட்டண விலக்கு கோரும் மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதி மறுத்தல், அகமதிப்பெண்களைக் குறைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக அரசாணை 92-ல் சுயநிதி கல்லூரிகள் மற்றும் சுயநிதி பாடப் பிரிவுகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. அப்படி கட்டணம் செலுத்தியிருந்தாலும் திரும்ப அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், இது சுயநிதி கல்லூரிகளுக்கு மட்டும்தான் பொருந்தும். சுயநிதி பாடங்களை நடத்தும் எங்களுக்கு பொருந்தாது என்கின்றன அரசு உதவி பெறும் கல்லூரிகள்.

விளக்கம் கேட்டிருக்கிறோம்…

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் விசாரித்தால், மாநில அரசிடம் விளக்கம் அளிக்க கோரியிருப்பதாக கூறுகின்றனர். ஆதி திராவிடர் நலத்துறை செயலர் கண்ணகி பாக்கியநாத னிடம் பேசியபோது, “இந்த அரசாணை 92 சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு பொருந்தும்” என்றார்.

இப்பிரச்சினைக்கு தமிழக அரசு உடனடியாக ஒரு தீர்வை அளிக்க வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in