

மீன் பிடிப்பது தொடர்பாக டாக்டர் மீனாகுமாரி கமிட்டி அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பாம்பன் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
மீனவ பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்காமலேயே தயாரிக்கப்பட்ட டாக்டர் மீனாகுமாரி கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகள் இந்தியா முழுவதிலும் உள்ள பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.
12 கடல் மைல் தொலைவுவரை மட்டும் மீன்பிடிக்கச் செல்லவேண்டும். 12 கடல் மைலுக்கு அப்பால் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கப் போதுமான நிபுணத்துவம் பெற்றிருக்கவில்லை.
மீன்பிடிப்பதற்கான நவீன மீன்பிடிக் கருவிகள் அவர்களிடம் இல்லை. 12 மைல் தொலைவை மீறினால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். எனவேதான் அன்னிய நாட்டுக் கப்பல்களுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என டாக்டர் மீனாகுமாரி கமிட்டி அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய கடலோர பகுதிகளில் முக்கியமாக தமிழக கடலோர பகுதி மீனவர்கள் இதனால் அதிக பாதிப்படைகின்றனர். இந்நிலையில், டாக்டர் மீனாகுமாரி கமிட்டி அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பாம்பன் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.