Published : 28 Apr 2015 07:16 PM
Last Updated : 28 Apr 2015 07:16 PM

குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மிரட்டல்: தனியார் பள்ளி நிர்வாகம் மீது மாணவி புகார்

கோவை ஆட்சியர் அலுவலகம் வெறும் மனுக்களால் மட்டுமல்லாது, பல்வேறு முற்றுகைப் போராட்டங்கள், அரசு மற்றும் தனியார் தரப்புகளில் நடக்கும் ஊழல்-முறைகேடு குறித்த மக்கள் எதிர்ப்பு கோஷங்களாலும் திங்கள்கிழமைதோறும் நடக்கும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நாளில் பரபரப்படைந்து வருகிறது.

நேற்று நடந்த இந்த முகாமில் பலதரப்பட்ட புகார் மனுக்களை பல்வேறு போராட்டங்கள் வழியாக அளித்தனர்.

கோவை ராமநாதபுரத்தில் தனியார் கான்வென்டில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜே.ஷஃப்ரீன், பள்ளிச் சீருடை, அடையாள அட்டையுடன், அரக்க உருவத்தை கார்ட்டூனாக காகிதத்தில் வரைந்து, `கல்வி வியாபாரிகளிடமிருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள்’ என்ற வாசகம் பொறித்து ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க தனது தாயுடன் வந்திருந்தார்.

தான் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்ததால் பள்ளி நிர்வாகம், ‘நீ கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கத்தான் லாயக்கு; டிசியை வாங்கிச் சென்றுவிடு’ என்று மிரட்டியதாகவும், தான் அதே பள்ளியில் படிக்க விரும்புவதாகவும், அதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் மனுவில் தெரிவித்திருந்தார்.

பேருந்து வசதி தேவை

கோல்டுவின்ஸ் பகுதியிலிருந்து காளப்பட்டி வரை பேருந்து வசதி இல்லாததால் 3 கிமீ தூரமுள்ள பள்ளிக்கு நடந்து சென்று படிக்க வேண்டியிருப்பதாகவும், பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக் கோரியும் வீரியம்பாளையம் கிராம மாணவ, மாணவியரை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திரட்டி ஊர்வலமாக வந்து மனு அளித்தனர்.

தீண்டாமை கொடுமை

தேவராயபுரம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்த 5 சிறுவர்களை முன்வைத்து, தீண்டாமைக் கொடுமை புகார் அளிக்க அப் பகுதி வந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கள் காலனியில் உள்ள முனியப்பன் கோயிலில் சிறப்புப் பூஜை நடைபெறுவதையொட்டி 10 முதல் 13 வயதுக்குட்பட்ட 5 மாணவர்கள் உயர் சாதியினர் உள்ள பகுதிகளில் வசூலுக்குச் சென்றதாகவும், அப்போது உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் சாதி பெயரைக் கூறி திட்டியதோடு, கட்டி வைத்து அடித்ததாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

அந்த சிறுவர்களை மீட்டு வந்து போலீஸில் புகார் தெரிவித்து, வழக்கு பதிவு செய்து ஒரு வாரமாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இதன்மீது ஆட்சியரின் நடவடிக்கை தேவை என்று சிறுவர்களை அழைத்து வந்த மக்கள் தெரிவித்தனர்.

டாக்ஸி ஓட்டுநர்கள்

இதைத் தொடர்ந்து, தனியார் கால்டாக்ஸி ஓட்டுநர்கள் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தாங்கள் அங்கம் வகிக்கும் கால்டாக்ஸி ஏஜென்சி, குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் தங்கள் கார்களையும், தங்களையும் இணைத்துக் கொண்டதாகவும், கம்பெனி அபிவிருத்தி அடைந்தபின்பு தற்போது அந்த நிறுவனம் ஒப்பந்தத்தை மீறிச் செயல்படுவதாகவும், அதை தட்டிக்கேட்டால் தங்களை திட்டமிட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், இதனால் 600-க்கும் மேற்பட்ட டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் தனிப்பட்ட கார் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை தேவை என்றும் கோஷங்கள் எழுப்பினர். அவர்களில் நான்கு பேரை மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க போலீஸார் அனுமதித்தனர்.

படுத்துப் புரண்டு…

பிஹார் மற்றும் ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பள பாக்கி வைத்திருக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை கோரி கடந்த ஒரு மாத காலமாக ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு படுத்துப் புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை அப்புறப்படுத்த போலீஸார் திண்டாடும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x