

ஆன்-லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் கடனாளியானதால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் கோவை வருவாய் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி(43).
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் தட்சிணாமூர்த்தி. கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணி யாற்றி வந்தார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். உறவினருடன் சேர்ந்து ஆன்-லைன் வியாபாரம் செய்து வந்தாராம். அதில் தட்சிணாமூர்த்திக்கு 40 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இக்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டாராம். இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கோவை ரயில் நிலையத்துக்கு வந்தவர் 6-வது பிளாட்பாரத் திலிருந்து ஜனசதாப்தி ரயில் புறப்பட்டபோது, தண்டவாளத்தில் திடீரென்று தலைவைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரயில்வே போலீஸார் விசாரணை நடந்தி வருகின்றனர்.