சிவகங்கை, முதுகுளத்தூரில் பலத்த மழை: மின்னல் தாக்கி சகோதரிகள் உட்பட 3 பேர் பலி

சிவகங்கை, முதுகுளத்தூரில் பலத்த மழை: மின்னல் தாக்கி சகோதரிகள் உட்பட 3 பேர் பலி
Updated on
1 min read

சிவகங்கை, முதுகுளத்தூர் பகுதிகளில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் அக்கா, தங்கை உட்பட 3 பெண்கள் பலியாகினர்.

சிவகங்கை அருகே இடையமேலூரைச் சேர்ந்த வீரப்பன் என்பவர் மனைவி மகேஸ்வரி (22). இவரது சகோதரி ராஜகுமாரி, மகேஸ்வரியின் வீட்டில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார். கர்ப்பிணியான மகேஸ்வரிக்கு, நாளை வளைகாப்பு நடைபெற இருந்தது. இந்நிலையில் சிவகங்கையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இருவரும் இடைய மேலூருக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. சிவகங்கை மேலூர் சாலையில், கூவாணிப்பட்டி அம்மன் கோயில் அருகே சென்றபோது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர். சிவகங்கை தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.

இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த முத்துவிஜயன் மனைவி திருமங்களேஸ்வரி (30). இவர் கீழத்தூவலில் உள்ள தனது வயலில் நேற்று பிற்பகல் மிளகாய் பழம் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பெய்த மழையின்போது, அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கீழத்தூவல் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in