

சகாயம் மற்றும் அவரது குழுவினருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பார்த்தசாரதியின் மரணம் குறித்து பாரபட்சமற்ற முறையில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில்,''கிரானைட் முறைகேடு பற்றி விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான கமிட்டிக்கு சட்டவிரோத கிரானைட் குவாரிகளை வீடியோ படமெடுத்த பார்த்தசாரதி மர்மமான முறையில் கார் விபத்தில் இறந்திருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் கமிட்டி தன்னுடைய விசாரணையை துவங்கிய நாளில் இருந்தே பல்வேறு மிரட்டல்களை, அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது.
முதலில் சகாயம் அலுவலகம் வேவு பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பிறகு, விசாரணையை தொடர்ந்து நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கே கொலை மிரட்டல் கடிதம் வந்தது.
அடுத்து, சகாயம் விசாரணை செய்து கொண்டிருந்த பகுதியில் பயங்கர ஆயுதத்துடன் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்னொரு முறை, சகாயம் கமிட்டிக்கு துணை புரிந்த தாசில்தார் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இப்போது விடியோ கிராப் செய்த பார்த்தசாரதி கார் விபத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்திருக்கிறார்.சகாயம் கமிட்டியினருக்கு நடக்கும் ஆபத்தான செயல்களையும், அவர்களுக்கு விடப்படும் அச்சுறுத்தல்களையும் தடுக்காமலும், அவற்றை அடக்க நடவடிக்கை எடுக்காமலும் பினாமி முதலமைச்சர் தலைமையில் உள்ள இந்த அதிமுக அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆரம்பத்திலிருந்தே இந்த விசாரணையில் அக்கறை காட்டாத அதிமுக அரசு, 16000 கோடி ரூபாய் கிரானைட் முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை காப்பாற்றவே முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
கிரானைட் முறைகேடு பற்றி எவ்வித அச்சமின்றியும், யாருடைய அச்சுறுத்தலுக்கும் உட்படாத வகையிலும் உயர்நீதிமன்றம் அமைத்துள்ள சகாயம் தலைமையிலான குழு தன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு சகாயம் மற்றும் அவரது குழுவினருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற அதே வேளையில், பார்த்தசாரதியின் மரணம் குறித்து பாரபட்சமற்ற முறையில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்'' என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.