

காஞ்சிபுரம் நகர்மன்றக் கூட்டத் தில் நேற்று அதிமுக- திமுக கவுன் சிலர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் நகராட்சியின் சாதாரணக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் மைதிலி தலைமையில் நேற்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சர்தார் முன்னிலை வகித்தார். நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண் டனர்.
கூட்டம் தொடங்கியதும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அப்போது, குறுக்கிட்ட 44-வது வார்டு திமுக கவுன்சிலர் சுரேஷ், ‘காஞ்சிபுரம் நகராட்சியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கவும், மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யவும் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்று கேட்டார். தொடர்ந்து, ரங்கசாமி குளம் மற்றும் அரசு மருத்துவமனை அருகே மக்கள் வரிப் பணத்தில் தலா ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்ட அம்மா உணவகங்கள் இன்னும் திறக்கப் படவில்லை’ என்றார்.
26-வது வார்டு அதிமுக கவுன்சிலர் சிவக்குமார் எழுந்து, திமுக கவுன்சிலர் சுரே ஷிடம் வாக்குவாதம் செய்தார். இதைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் இடையே லேசான கைகலப்பு நேரிட்டதால், நகர்மன்ற அரங்கில் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, நகர்மன்றத் தலைவர் மைதிலி, நிலுவையில் இருந்த 4 தீர்மானங்களை வாசித்து விட்டு, கூட்டம் முடிந்ததாகக் கூறி நகர்மன்றக் கூட்டத்திலிருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அனைத்து கவுன்சிலர் களும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து திமுக கவுன்சிலர் சுரேஷ் கூறும்போது, ‘மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்ட அம்மா உணவகத்தை திறப்பது குறித்த கேள்விக்கு நகர்மன்றத் தலைவரோ அல்லது அதிகாரிகளோ பதில் அளித்திருக்க வேண்டும்.
ஆனால், அதிமுக கவுன்சிலர் ஒருவர் கேள்வியெழுப்பக் கூடாது என்று வாக்குவாதம் செய்தார். இதனால், லேசான கைகலப்பு ஏற்பட்டது. அதேவேளையில், நகர்மன்றத் தலைவரும் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளாமல் கூட்டத்திலிருந்து வெளியேறினார்’ என்றார்.
அம்மா உணவகத்தை திறப்பது குறித்த கேள்விக்கு அதிமுக கவுன்சிலர் ஒருவர் கேள்வியெழுப்பக் கூடாது என்று வாக்குவாதம் செய்தார். இதனால், கைகலப்பு ஏற்பட்டது.