

காவிரி ஆற்றில் கர்நாடக அரசு இந்த ஆண்டு உரிய தண்ணீரைத் திறந்துவிடாததால் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
காவிரியில் கர்நாடகம் உரிய நீரை திறக்கவும், தமிழகத்துக்கான பற்றாக்குறை நீரை பெற்றுத் தர காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட கோரியும் தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீரை கடந்த அக்டோபர் 23-ம் தேதி முதல் கர்நாடக அரசு திறந்துவிடவில்லை என்று தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.கருணாகரன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு முன்பு முறையிட்டார்.
மேலும், கர்நாடக அரசு தண்ணீர் திறக்காததால் தமிழகத்தில் விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. இவ்வாறு தொடர்ந்து தண்ணீர் கிடைக்காத நிலையில் தமிழக விவசாயிகள் என்னதான் செய்ய முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியதோடு, காவிரி நீர் திறப்பது தொடர்பான ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாகச் செயல்படுத்தாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
எனவே, காவிரி நீர் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு, காவிரி நீர் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிப்பது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்தது.