

அமைச்சர் விஜய் பாலாஜி
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு 4 முழம் வேட்டி, ஜரிகை வைத்த சேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி - சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஆஸ்டின் (திமுக) மற்றும் கே.நித்தியானந்தன் (கொமதேக) கொண்டு வந்தனர்.
அப்போது கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி பேசுகையில், “பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஆண்டுதோறும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 12 ஆண்டுகளாக ஒரே ரகத்தில் தான் வேட்டி சேலை வழங்கப்பட்டது. மக்களுக்கு எது பிடித்துள்ளதோ, அதை தரமாக வழங்க வேண்டும் என்பது தான் முதல்வரின் உத்தரவு ஆகும்.
அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பெரும்பாலான மக்கள் 8 முழம் வேட்டி வேண்டாம், 4 முழம் வேட்டி தான் வேண்டும் என கேட்டார்கள். அதன் அடிப்படையில், 4 முழம் வேட்டி மற்றும் ஜரிகை வைத்த சேலை வழங்க அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.
அப்போது ஆஸ்டின், “நான்கு முழம் வேட்டி விலை குறைவாகவும், தரமற்றதாகவும் இருப்பதாக நெசவாளர்கள் தெரிவிக்கிறார்கள். தரம் குறைவான வேட்டிகளை கூலி குறைவாக கொடுத்து வாங்குவதற்கு என்ன காரணம்?” என்றார்.
அதற்கு, வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், “கிராமங்களில் 4 முழம் வேட்டிதான் சிறப்பாக இருக்கிறது என்பது மக்களின் கருத்தாக உள்ளது” என்றார்.
அப்போது அமைச்சர் விஜய் பாலாஜி, “பொங்கலுக்கு பிறகு அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பொங்கல் பரிசாக வழங்கப்படும் 4 முழ வேட்டிகளை கட்டிக்கொண்டு வருகிறோம். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட 8 முழ வேட்டிகளை எதிர்க்கட்சியினர் கட்டிக்கொண்டு வரவேண்டும். அதைப் பார்த்து எது தரமாக உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்” என்றார்.