

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந் ததால் சென்னை நகரின் குடிநீருக் காக திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நீர் கடந்த 23-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இருப்பினும் தற்போதைய நீர் இருப்பை வைத்து 2 மாதங்களுக்கு சமாளிக்கலாம் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக ஆந்திர மாநிலங் களுக்கு இடையில் 1983-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 15 டிஎம்சி கிருஷ்ணா நீரை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும். ஆனால், ஆண்டுதோறும் ஆந்திர அணைகளில் நீர் இருப்பை பொறுத்து நீர் திறந்து விடப்படுகிறது.
கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் தமிழக ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டில் கணக்கிடப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து படிப்படியாக திறந்துவிடப்பட்ட நீர் திடீரென மார்ச் மாதம் நிறுத்தப் பட்டது. இதனால், சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப்பணித் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதினார். தொடர்ந்து ஏப்ரல் 10-ம் தேதி முதல் மீண்டும் கிருஷ்ணா நீரை ஆந்திரம் திறந்துவிட்டது. இந்த நீர் 13-ம் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் வினாடிக்கு 620 முதல் 707 கன அடிவரை நீர் வந்தது.
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி கிருஷ்ணா நீர் திடீரென நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் நிலவரப்படி நீர் வரத்து வெகுவாக குறைந்து வினாடிக்கு 152 கன அடி மட்டுமே வந்தது.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
கண்டலேறு அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைந்ததால் நீர் திறப்பை நிறுத்திவிட்டனர். இன்று(நேற்று) காலை நிலவரப்படி வினாடிக்கு 30 கன அடி நீரே வந்தது. இனி தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின் ஜூன் இறுதியில் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். தற் போதைக்கு ஏரிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நீரை ஜூன் இறுதி வரை பயன்படுத்தலாம். வீராணம் ஏரி நீரும் கிடைப்பதால் சமாளிக்கலாம். ஆகஸ்ட் முதல் தற்போது வரை 5.266 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.