

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 6 தொழிலாளர்களின் உடல்கள் மறு பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டன.
ஆந்திர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 தமிழக தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில், திருவண்ணாமலை மாவட்டம் வேட்டகிரி பாளையம் கிராமம் சசிக்குமார், பெருமாள், முருகன், முருகப்பாடி கிராமம் முனுசாமி, மூர்த்தி மற்றும் காந்தி நகர் கிராமம் மகேந்திரன் ஆகிய 6 பேரது உடல்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.
ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவுபடி உஸ்மானியா பல்கலைக்கழக ஆய்வு மைய சிறப்பு மருத்துவர்கள் தக்யுதீன் கான், அபிஜித் சுபேதர், ரமணமூர்த்தி ஆகியோர் 5 மணி நேரத்துக்கும் மேலாக மறு பிரேதப் பரிசோதனை செய்து நடத்தினர்.
பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9 நாட்களாக பாதுகாக்கப்பட்ட 6 பேரது உடல்களும் ஆட்சியர் அ.ஞானசேகரன் முன்னிலையில் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து அவர்களது உறவினர்கள் சொந்த கிராமங்களுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.