Published : 15 Apr 2015 12:11 PM
Last Updated : 15 Apr 2015 12:11 PM

தாலி அகற்றும் போராட்டத்தில் சிவசேனா வெறியாட்டத்தை அனுமதித்தது அவமானம்: இளங்கோவன்

திராவிடர் கழகம் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் சிவசேனாவின் வெறியாட்டத்தை அனுமதித்தது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "திராவிடர் கழகம் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தை நடத்தக் கூடாது என்பதில் ஆளும் கட்சியினர் காவல்துறையினரின் துணையோடு பல்வேறு உத்திகளை கையாண்டு வந்தனர். இப்போராட்டத்துக்கு அனுமதி அளித்தால் சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மேல்முறையீட்டு மனு மூலம் அ.தி.மு.க. அரசு நீதிமன்றத்தில் கூறி நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுக்க தடையாணை பெறப்பட்டது.

இதை உறுதிபடுத்துவதற்காகவே காவல்துறையினரின் துண்டுதலின் பேரில் பல்வேறு இந்துத்துவா அமைப்பினர் மற்றும் சிவசேனா கட்சியினர் திட்டமிட்டு பெரியார் திடலுக்கு உள்ளே புகுந்து வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு எதிராகவே இத்தகைய வன்முறை நடந்திருப்பது வெட்கக் கேடானதாகும். பெரியார் திடலில் வன்முறை நிகழ்த்த வேண்டும் என்கிற நோக்கத்தில் சிவசேனா கட்சியினர் வந்த ஆட்டோவில் நான்கு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கடப்பாரை, கத்தியல் போன்ற கொலைவெறி ஆயுதங்கள் இருந்ததாகவும் அதை போலீசார் கைப்பற்றியதாகவும் அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளன.

மும்பையில் தமிழர்களை அடித்து துன்புறுத்தி விரட்டப்படுவதை செயல்திட்டமாக கொண்டு செயல்பட்டு மறைந்த பால்தாக்கரேவின் கட்சியான சிவசேனாவுக்கு தமிழகத்தில் கிளை அமைத்து வகுப்புவாத வெறிச் செயலில் ஈடுபடுவதை அனுமதிப்பதை விட அவமானச் செயல் தமிழக மக்களுக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஒருவர் தாலி அணிவதும், அகற்றிக் கொள்வதும் அவரவர் தனிமனித விருப்பமும், உரிமையுமாகும். இக்கருத்தை ஆதரித்து பரப்புரை செய்ய அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பெரியார் திடல் வளாகத்திற்குள்ளே திராவிடர் கழகம் அமைதியாக நடத்திய நிகழ்ச்சியை வன்முறை வெறியாட்டத்தின் மூலம் சீர்குலைக்கும் நடவடிக்கையை அனுமதித்த காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், நிகழ்ச்சி முடிந்து வெளியூர் செல்ல முயன்ற 10-க்கும் மேற்பட்ட திராவிடர் கழக தொண்டர்கள் நேற்றிரவு பெரியார் திடலுக்கு வெளியே வந்த போது காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் வகுப்புவாத பா.ஜ.க. ஆதரவு போக்கையே வெளிப்படுத்துகிறது.

இதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பிறந்த மண்ணில் வகுப்புவாத, பிற்போக்கு சக்திகள் வேரூன்றி தலைதூக்க முயற்சிப்பதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இச்செயல்கள் மதச்சார்பற்ற சக்திகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும்.

சில தினங்களுக்கு முன்பு இதே பிரச்சினைக்காக ஒரு தனியார் தொலைக்காட்சி ஊடக அலுவலகம் தாக்கப்பட்டது. எழுத்தாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். கருத்து சுதந்திரத்திற்கு மிகப்பெரிய ஆபத்து தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளதையே இத்தொடர் நிகழ்வுகள உணர்த்துகின்றன.

எனவே, தமிழகத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிற வகுப்புவாத, பாசிச, பிற்போக்கு சக்திகளின் வன்முறை வெறியாட்டத்தை முறியடிக்க தமிழகத்தில் உள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் ஒரணியில் திரள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்று இளங்கோவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x