Published : 07 Apr 2015 05:25 PM
Last Updated : 07 Apr 2015 05:25 PM

ஆந்திராவில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை: இளங்கோவன், சீமான் கண்டனம்

ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரங்களை வெட்டியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.

ஆந்திராவில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்: ( தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்)

''நேற்றிரவு ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாத்திரி மலையில் ஸ்ரீவாரிமெட்டு, ஈசகுண்டா பகுதியில் செம்மரம் வெட்டும் கும்பலை பிடிக்க அந்த மாநில வனத்துறையினர் முயற்சித்த போது 20 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கப்பட்டுள்ளனர். இதில் 12 தமிழர்கள் பலியாக்கப்பட்டதாக நம்பகத்தகுந்த தகவல்கள் உறுதி செய்கின்றன.

மரம் வெட்டும் கும்பலை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. வனத்துறையினரின் இத்தகைய தாக்குதல் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுகின்றன.

இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஆந்திர மாநில அரசுக்கு இருக்கிறது. சமபீகாலமாக செம்மர கடத்தலில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதிலும், நடவடிக்கை எடுப்பதிலும் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. இவை குறித்து இரு மாநில சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவின் மூலமாக பாரபட்சமற்ற விசாரணைக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட வேண்டும்'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

சீமான்: (நாம் தமிழர் கட்சி)

''மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி தமிழர்களைச் சிட்டுக் குருவிகளைப் தமிழனுக்குச் செல்லும் இடமெல்லாம் அடி என்கிற நாதியற்ற நிலைமை நாளுக்கு நாள் தொடருவதை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது.

12 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை வெறும் மரக்கடத்தல் பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. இந்திய இறையாண்மையை கூறுபோடத்தக்க கொடூரத்தை சர்வசாதாரணமாக நிகழ்த்தி இருக்கிறார்கள் ஆந்திர அதிகாரிகள். அப்பாவித் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டில் என்ன நடந்தது என்பதை நியாயமான மனித உரிமைக் குழுக்களை வைத்து விசாரிக்க வேண்டும். நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற உடனடியாக உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இனியும் தொடர்ந்தால் நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையான போராட்டங்களைக் கையிலெடுக்கும்'' என்று சீமான் கூறியுள்ளார்.

இரா.முத்தரசன் ( இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் )

''தமிழக எல்லையை ஒட்டி ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரி வனப்பகுதியில் செம்மரம் வெட்டு கிறவர்களை தேடுகிறோம் என்ற பெயரில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளர்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாகும் வாய்ப்பு இதனால் இருக்கிறது என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. இதுவரை இறந்தவர்களில் 12 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். சட்டத்தை மீறி, மனிதாபிமானத்தை முற்றாக புறக்கணித்து, காவல்துறையும் காட்டு இலாக்காவும் இணைந்து நடத்திய இந்த கொலைச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர மாநில அரசு உடனடி இழப்பீட்டு தொகையை வழங்க தமிழக அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து கொலைகுற்றத்திற்கான வழக்குப் பதிவு செய்து தண்டனை பெற்றுத் தரவேண்டும், என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x