

கிரானைட் முறைகேடு குறித்து சட்ட ஆணையர் உ.சகாயம் 12-ம் கட்ட விசாரணையை நேற்று மதுரையில் தொடங்கினார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே 11 கட்ட விசாரணையை முடித்திருந்த உ.சகாயம், நேற்று 12-ம் கட்ட விசாரணையைத் தொடங்கினார். ஆய்வுக்குழு அலுவலர்கள் ஆல்பர்ட், ஜெய்சிங் ஞானதுரை, ராஜாராம், கீர்த்தி பிரியதர்ஷினி, ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இறுதி அறிக்கை தயாரிப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
குற்றச்சாட்டு வாரியாக பெற வேண்டிய வாக்குமூலம், இணைக்க வேண்டிய ஆவணங்களை விரைவாக தயார் செய்து இறுதி அறிக்கை பணியை ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும் என சகாயம் கேட்டுக்கொண்டார். நேற்றும் துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்றது.
ஆய்வுக்குழுவில் இடம் பெற்றுள்ள துணை ஆட்சியர்கள் ராஜாராம், கீர்த்தி பிரியதர்ஷினி ஆகியோருக்கு பாதுகாப்பு கருதி அரசு வாகனங்களை வழங்க வேண்டும் என சகாயம் கேட்டிருந்தார். இந்த வாகனங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், வருவாய் நிர்வாக ஆணையர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து 2 ஜீப்புகளை மதுரை மாவட்ட நிர்வாகம் நேற்று சகாயத்திடம் ஒப்படைத் தது.