Published : 07 Mar 2014 06:32 PM
Last Updated : 07 Mar 2014 06:32 PM

மம்தாவுடன் ஜெயலலிதா தொலைபேசியில் பேச்சு: மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை

தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியுடன் வெள்ளிக்கிழமை காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த தகவலை முக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பிரதமர் பதவிக்கு வர விரும்பினால் அவருக்கு ஆதரவு தரத் தயார் என்று மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருந்தார். இதற்காக மம்தாவுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்தார். ஆனால் இருவரும் நடத்திய ஆலோசனைகள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் பற்றியும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கான வாய்ப்புகள் பற்றியும் இரு தலைவர்களும் பேசியதாக திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த மம்தா பானர்ஜியிடம், பிரதமர் பதவிக்கு வர ஜெயலலிதா ஆசைப்பட்டால் அவருக்கு ஆதரவு கொடுப்பீர்களா என்று கேட்டதற்கு ‘எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, பிரதமர் பதவி மீது நான் ஆசைப்படவில்லை. மக்கள் நலன் மீதுதான் என் முழு கவனமும்’ என்று தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் அதிமுக வுக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி பேச்சு முறிந்த மறு தினமே மம்தாவுடன் ஜெயலலிதா பேசி இருக்கிறார்.

மம்தா பானர்ஜியின் பிரதான எதிரிகளான இடதுசாரி கட்சிகள் இப்போது குறுக்கே இல்லை என்பதால் இரு தலைவர்களுக்கும் இடையே சுமுக நிலை ஓங்கி இருப்பதாக திரிணமூல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x