Published : 20 Apr 2015 10:28 AM
Last Updated : 20 Apr 2015 10:28 AM

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் - பாமக உண்மை அறியும் குழு வலியுறுத்தல்

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்தால்தான் உண்மை தெரியவரும் என்று பாமகவின் உண்மை கண்டறியும் குழு வலியுறுத்தியுள்ளது.

திருப்பதி அருகே 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உண்மையைக் கண்டறிவதற்காக பாமக சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பல தரப்பினரிடம் விசாரணை நடத்தியது. அது தொடர்பாக பாமக வழக்கறிஞர் பிரிவு தலைவர் கே.பாலு, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அதன்பிறகு எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இந்த சம்பவத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் நடுநிலையான, நம்பகமான புலன் விசாரணையை உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும். சிபிஐ விசாரித்தால்தான் இதில் உண்மை நிலை வெளிவரும்.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள், அதற்கு உத்தரவிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்களைக் கைது செய்த பிறகே புலன் விசாரணை தொடங்க வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இடைக்கால நிவாரணமாக ஆந்திர மாநில அரசு வழங்குவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஆந்திராவில் கடப்பா, நெல்லூர், ராஜமுந்திரி ஆகிய இடங்களில் உள்ள மத்திய சிறைகளிலும், சித்தூர் உள்ளிட்ட கிளைச் சிறைகளிலும் 3 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஜாமீனில்கூட வெளிவர முடியாமல் தவிக்கும் அவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு இன்னமும் வேடிக்கை பார்க்காமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பாலு கூறினார்.

ஆதரவற்று நிற்கிறேன்

துப்பாக்கிச் சூட்டில் பலியான திருவண்ணாமலை மாவட்டம் காளசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பழனியின் மனைவி லோகநாயகி கூறும்போது, ‘‘ என் கணவர் டெய்லர். துணி வாங்கப் போவதாக சொல்லிவிட்டு கண்ணமங்கலம் போனவர், பிணமாகத்தான் வந்தார். அவரது முகம் சிதைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். செம்மரம் கடத்தியதாகச் சொல்லி அவரை அநியாயமாக கொன்றுவிட்டார்கள். எங்களுக்கு திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது. பிறந்து 42 நாளே ஆன குழந்தையுடன் ஆதரவற்று நிற்கிறேன். என் குழந்தைக்கு இன்னமும் பெயர்கூட வைக்கவில்லை’’ என்றார் கலங்கிய கண்களுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x