

இந்தியாவில் முதல்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முடநீக்கியல் மற்றும் விபத்தியல் உயர் சிகிச்சை துறை சார்பில் ரூ.1.2 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் முடநீக்கியல் மற்றும் எலும்பு முறிவு வார்டு, ரூ.16 லட்சத் தில் அமைக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிகிச்சை மையம் மற்றும் ரூ.15 லட்சத்தில் திறந்த எலும்பு முறிவுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றின் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மருத்துவமனை டீன் ஆர்.விமலா தலைமை தாங்கினார். சிறப்பு பிரிவுகளை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் பேசிய தாவது:
சென்னை அரசு பொது மருத்துவ மனையில் 3 ஆயிரம் உள்நோயாளி களும், தினமும் 12 ஆயிரம் வெளிநோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 200 அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. இந்த மருத்துவமனையில் புதுப் பிக்கப்பட்டுள்ள குழந்தைகள் முட நீக்கியல் பிரிவு, விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் (குழந்தைகள் மற்றும் பெற்றோர்) ஒரே இடத்திலேயே சிகிச்சை பெற வழிவகுக்கும்.
இங்கு அனைத்து நோயாளி களுக்கும் முதலமைச்சரின் விரி வான காப்பீட்டுத் திட்ட உதவியுடன் திறந்த எலும்பு முறிவுக்கான உடனடி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரை இந்தத் துறை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 33 லட்சத்தை ஈட்டியுள்ளது.
இந்த மருத்துவமனையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக இந்த அரசு மருத்துவமனையில்தான் இந்தப் பிரிவு தொடங்கப்படுகிறது. இந்த சிகிச்சை மையம் புறநோயாளிகள் பிரிவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் செயல்படும். இங்கு பல்வேறு சிறப்பு வல்லுநர்கள், உடலியங் கியல் வல்லுநர்கள், இயன்முறை டாக்டர்கள் ஆகியோரைக் கொண்ட குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர். அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சை தொடர்பான ஆலோ சனைகளை வழங்குவர். விளை யாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயத்துக்கு சிறப்பு சிகிச்சை அளித்து அவர்களை விரைவாக குணப்படுத்தி அனுப்புவர்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) கீதாலட்சுமி, முடநீக்கியல் மற்றும் உயர் சிகிச்சைத் துறை தலைவர் (பொறுப்பு) தீன் முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.