பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தோடு ஆர்ப்பாட்டம்

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தோடு ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

பணிநீக்கம் செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் இன்று குடும்பத்தோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கும் அதிகமான டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று (வியாழக்கிழமை) கொளுத்தும் வெயிலில் மதியம் 12.30 மணியளவில் தொடங்கியது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பங்கேற்றதால், ஆர்ப்பாட்டத்தை விரைவில் முடித்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் மதியம் 2 மணிக்கு ஆர்ப்பாட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.

இப்போராட்டம் குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலுச்சாமி கூறியதாவது:

தமிழகத்தின் வருவாய்க்கு முக்கிய காரணமாக டாஸ்மாக் உள்ளது. ஆனால் டாஸ்மாக் பணியாளர்களுக்கு எந்த பணி பாதுகாப்பும் இல்லை. குறைந்த ஊதியத்துடன் தற்காலிக ஊழியர்களாகவே அவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டு 1,500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும் மீண்டும் அவர்களை பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை.

தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரம் டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்வருவதில்லை. மேலும் அந்தந்த விற்பனை மையங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு பணியாளர்கள்தான் பலிகடா ஆக்கப்படுகிறார்கள். இதைக் கண்டித்துதான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in