

நேபாள பூகம்பத்தின் தாக்கத்தால் சென்னையில் பல பகுதிகளில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது. அடுக்குமாடிக் கட்டிடங்களில் இருந்தவர்கள் பீதியடைந்து வெளியே ஓடிவந்தனர்.
நேபாளத்தில் நேற்று காலை 6.15 மணி, 6.45 மணி, பகல் 12.15 மணி, மாலை 5.48 மணி என நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.6 ரிக்டர், 5.0 ரிக்டர், 4.4 ரிக்டர், 4.8 ரிக்டர் என்ற அளவில் இந்த அதிர்வு பதிவானது. இதன் தாக்கத்தால் இந்தியாவில் பிஹார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேச மாநிலங்களிலும் உயிரிழப்பு நேர்ந்துள்ளது. மும்பை, டெல்லி மட்டுமல்லாது சென்னை வரை நில அதிர்வுகள் உணரப்பட்டன.
சென்னையில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், நந்தனம், பட்டினப்பாக்கம், பாரிமுனை, மயிலாப்பூர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
மயிலாப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சண்முகப் பிரியா கூறும்போது, ‘‘காலை 11 மணி அளவில் தலை சுற்றுவதுபோல இருந்தது. எனக்கு மட்டும்தான் அப்படி இருந்தது என்று நினைத்தேன். அருகில் இருந்த நண்பர்களும் அதையே கூறினர். பிறகுதான் தரை லேசாக ஆடுவதை உணர்ந்தேன்’’ என்றார்.
அடுக்குமாடிக் குடியிருப்புகள், உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் நில அதிர்வை உணர்ந்தவுடன் பீதியடைந்து வெளியே ஓடி வந்தனர். சில நிமிட பரபரப்புக்கு பிறகு, இயல்பு வாழ்க்கை திரும்பியது. லேசான அதிர்வுகள் மட்டுமே உணரப்பட்ட பகுதிகளில் மக்கள் பீதியடையவில்லை.