Published : 23 Apr 2015 09:05 AM
Last Updated : 23 Apr 2015 09:05 AM

அரசு பள்ளிகள் ஆய்வகங்களுக்கு 4,362 உதவியாளர்கள் புதிய முறையில் தேர்வு: நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்

அரசு பள்ளிகளுக்கு 4,362 ஆய்வக உதவியாளர்கள் புதிய முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டாலும்கூட, நேர்காணல் அடிப்படையில்தான் இறுதி பணி நியமனம் நடைபெற உள்ளது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.) கீழ் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆய்வக உதவியாளர்கள் நேரடியாக நியமிக்கப்படுவது பள்ளிக்கல்வி வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, பதிவறை எழுத்தர் உள்ளிட்ட அடிப்படை பணியாளர்களைக் கொண்டு பதவி உயர்வு மூலமாகவே ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன.

ஆய்வக உதவியாளர் நேரடி நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலர் டி.சபீதா வெளியிட்டுள்ள உத்தரவின்படி, முதலில் மாநில அளவில் எழுத்துத்தேர்வும் அதைத்தொடர்ந்து மாவட்ட அளவில் நேர்முகத்தேர்வும் நடத்தப்படும். இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி.யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறிப்பிட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

“ஒரு காலியிடத்துக்கு 5 பேர்” என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். நேர்முகத்தேர்வுக்கு மொத்தம் 25 மதிப்பெண். இதில், வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண், உயர் கல்வித்தகுதிக்கு 5 மதிப்பெண், பணிமுன்அனுபவத்துக்கு 2 மதிப்பெண், நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தேர்வர்கள் அளிக்கும் பதிலுக்கு 8 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு நடத்தப்பட்ட போதிலும், இறுதி பணிநியமனம் என்பது நேர்முகத்தேர்வு அடிப்படையில்தான் என்று அரசு வெளியிட்ட உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபாரிசுக்கு வாய்ப்பு

பொதுவாக, அரசுப் பணிகளுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் ஊழியர்கள் தேர்வுசெய்யப்படும்போது இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வு முதல் யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ் தேர்வு வரை இதுதான் நடைமுறை.

ஆனால், ஆய்வக உதவியாளர் பணிக்கு மட்டும் எழுத்துத்தேர்வு நடத்திவிட்டு அந்த மதிப்பெண்ணை எடுத்துக்கொள்ளா மல் வெறும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்ணை வைத்து மட்டுமே பணிநியமனம் செய்வது சிபாரிசுக்கும், அரசியல் தலையீடுக்கும் வழிவகுக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.

எனவே, எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு இரண்டிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்கள் தேர்வுசெய்யப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆய்வக உதவியாளர் பணிக்கு எஸ்எஸ்எல்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30. பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35. இருப்பினும், இடஒதுக்கீட்டுப் பிரிவினரும், பொது பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளும் 10-ம் வகுப்பைக் காட்டிலும் கூடுதல் கல்வித்தகுதி (பிளஸ் டூ, பட்டப் படிப்பு) பெற்றிருந்தால் அவர்களுக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. தங்கள் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு உள்ள மாவட்டத்தில் அரசு தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 24 முதல் மே மாதம் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மே 31-ம் தேதி நடைபெறும். இதில், எஸ்எஸ்எல்சி அளவில் அறிவியல் பாடத்தில் 120 வினாக்களும், பொது அறிவு தொடர்பான 30 கேள்விகளும் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x