

மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது சகோதரர் இளையராஜா, பள்ளி மாணவியை கேலி செய்த விவகாரத்தில் 1.7.2008-ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் வீரபாண்டியன், ஜெயக்குமார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், முதல் இரு எதிரிகளுக்கு ஆயுள் தண்டனையும், வீரபாண்டியன், ஜெயக்குமாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. ஜெயக்குமார், வீரபாண்டியன் ஆகியோருக்கான தண்டனையை அதிகரிக்க கோரி செந்தில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில், ஒரே கொலையில் இரு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், இரு குற்றவாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியது தவறு.
கொலை வழக்கில் குறைந்தபட்ச தண்டனையை விட குறைவாக தண்டனை வழங்க கீழ் நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஏ.செல்வம், டி.மதிவாணன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனைதான் விதிக்க முடியும். ஆனால், இந்த வழக்கில் மதுரை 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி என்.வேங்கடவரதன், வழக்கில் தொடர்புடைய 2 குற்றவாளிகளுக்கு சட்டத்தில் இல்லாத 10 ஆண்டு தண்டனையை வழங்கி பாரபட்சம் காட்டியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க நீதிபதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் விளக்கம் தரவில்லை.
உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத நீதிபதியை கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தீர்ப்பு நகலை தலைமை நீதிபதிக்கு பதிவுத் துறை அனுப்ப வேண்டும். இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் இருவருக்கு கீழ்நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.