

ரயில் நிலையங்களில் பிளாட் பாரம் டிக்கெட் கட்டணம் இன்று முதல் ரூ.10-ஆக உயர்த் தப்படுகிறது.
நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட் பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.5-ஆக இருந்தது. இந்நிலையில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணத்தை ரூ.5-ல் இருந்து ரூ.10-ஆக உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி இந்த புதிய கட்டணம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அனைத்து ரயில் நிலையங்களுக்கும் புதிய கட்டணத்தில் பிளாட்பாரம் டிக்கெட்டை அச்சிட்டு கொடுக்க மண்டல அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய டிக்கெட்கள் அச்சிடப்படும் வரை திருத்தப்பட்ட முத்திரையுடன் உள்ள டிக்கெட்டுகளை பயன்படுத்தலாம். பண்டிகை மற்றும் திருவிழாக் காலங்களில் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த பிளாட்பாரம் டிக்கெட் கட்டணத்தை மேலும் உயர்த்திக்கொள்ள, அந்தந்த ரயில்வே மண்டல மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ரயில்களில் பருப்பு வகைகள், தானிய வகைகள், யூரியா உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கான சரக்கு கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல நிலக்கரிக்கான கட்டணம் 6.3 சதவீதமும், சிமென்ட்டுக்கு 2.7 சதவீதம் வரையும் இரும்பு மற்றும் தளவாடங்களுக்கு 3.1 சதவீதம் வரையும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த புதிய சரக்கு கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருகிறது. கட்டண உயர்வால் பருப்பு வகைகள், தானிய வகைகள், யூரியா, சிமென்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.