

கோவை மேயர் பதவியில் இருந்து செ.ம.வேலுசாமி திடீரென ராஜினாமா செய்துள்ளார். அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சிறிது நேரத்தில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
கோவை மேயராகவும் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்தவர் செ.ம.வேலுசாமி. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இவரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்தார்.
புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படும்வரை அப்பொறுப்பை கோவை புறநகர் மாவட்டச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பார்த்துக் கொள்வார் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், தனது மேயர் பதவியையும் செ.ம.வேலுசாமி ராஜினாமா செய்துள்ளார். கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அதாவது செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில், மாநகராட்சி ஆணையர் ஜி.லதாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கி னார்.
இதையடுத்து, துணை மேயராகப் பொறுப்பு வகித்து வரும் லீலாவதி உன்னி, மேயர் பொறுப்பை கூடுதலாகக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
மேயர் ராஜினாமா குறித்து மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்படும் எனவும், 6 மாதத்துக்குள் புதிய மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்படலாம் எனவும் நிருபர்களிடம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் கன்னியாகுமரி, தருமபுரி மற்றும் புதுச்சேரியில் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து, கன்னியாகுமரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் சிவசெல்வராஜன், ஜாண் தங்கம், தருமபுரி மாவட்டச் செயலாளர் கே.பி.அன்பழகன், புதுச்சேரி மாநில செயலாளர் ஏ.அன்பழகன் ஆகியோர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
மேலும் அமைச்சரவையில் இருந்து பி.வி.ரமணா, பச்சைமால், தாமோதரன் ஆகியோர் நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்தும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் மூத்த அமைச்சரான கே.பி.முனுசாமி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.