

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் வாழ்வியல் மையத்தில் அளிக்கப்படும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைக்கு நோயாளிகளிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.
மாறி வரும் உணவுப் பழக்கம், வாழ்வியல் நடைமுறைகளால் பெருகி வரும் நோய் பாதிப்பிற்குள்ளாகி, அடிக்கடி மருத்துவமனைகளை நோக்கி தள்ளப் பட்டுகின்றனர் பொதுமக்கள். பணம் அதிகம் செலவு செய்தால் மட்டுமே நல்ல தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற மன நிலைக்கு நடுத்தர மக்களும் வந்துள்ளனர்.
மாத குடும்பச் செலவு பட்டியலில் மருத்துவச் செலவுக்கும் பணம் ஒதுக்க வேண்டிய நிலையில் பெரும்பாலான மக்களின் உடல்நிலை உள்ளது. “இது போன்ற நிலைமையை மக்கள் எதிர்கொள்ளத் தேவையில்லை. நாங்கள் அளிக்கும் வாழ்வியல் சிகிச்சையை கற்றுச் செல்லுங்கள். வாழ்க்கை முழுவதும் நோயின்றி வாழ வழிவகுக்கிறோம்” என்கிறார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வாழ்வியல் மைய மருத்துவ அலுவலர் வி.புவனேஸ்வரி.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எண் 24 (ஏ) என்ற அறையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வாழ்வியல் மையம் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைக்கு நோயை குணப்படுத்திக் கொள்ள நோயாளிகள் வருகின்றனர். ஆனால், வாழ்வியல் மையத்துக்கு, நோய்கள் வராமல் தடுப்பதற்காக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
யோகா, உணவுக் கட்டுப்பாடு சிகிச்சை, ஹைட்ரோ தெரபி சிகிச்சை, மண் சிகிச்சை, அக்குபஞ்சர், அகச்சிவப்பு கதிர் சிகிச்சை, ஆயில் மசாஜ் தெரபி ஆகிய முறைகள் மூலமாக உடல் பருமன், ரத்த அழுத்தம், தூக்கமின்மை, ஆஸ்துமா, மூட்டுவலி, முழங்கால் வலி, ஒற்றைத் தலைவலி, நீரழிவு, மாதவிடாய் கோளாறுகள் உள்ளிட்ட நோய்களுக்கு இயற்கை மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
"இந்த முறையிலான சிகிச்சைக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் தினமும் நூற்றுக்கும் அதிகமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனையின் பல்வேறு சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகளின் உடல் மற்றும் மன நலத்துக்காக தற்போது மருத்துவர்கள் பலர் இந்த சிகிச்சைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்கின்றனர். அவர்களுக்கு யோகாவும் கற்றுத் தருகிறோம். இது போன்ற சிகிச்சையால் நோயாளிகள் திருப்தியுடன் வெளியே செல்கின்றனர். தற்போது இரு உதவியாளர்கள், அலுவலக ஊழியர் உட்பட 4 பேர் இருக்கிறோம்.
இத் துறைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எட்வின்ஜோ பெரிதும் துணைபுரிந்துவருகிறார். இந்த சிகிச்சை முறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் நிர்வாகமும் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த சிகிச்சை மையத்துக்கு தனிக் கட்டிடம் கட்டித் தருவதற்கு ரூ. 33 லட்சத்தை நிர்வாகம் பெற்றுத் தந்துள்ளது என்றார் மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி."
தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த வாழ்வியல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது. நோயாளிகள்தான் வர வேண்டும் என்பதில்லை, நோய் இல்லாமல் வாழ வேண்டும் என நினைப்பவர்களும் மையத்துக்கு வந்து யோகா கற்றுச் செல்லலாம் என தெரிவிக்கின்றனர்.